Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

10, பிளஸ்2 தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: தவெக தலைவர் நடிகர் விஜய் வழங்கினார்

சென்னை: மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள தனியார் விடுதியில் நேற்று காலை தமிழக வெற்றி கழகம் சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் 88 சட்டமன்ற தொகுதியில் முதல் 3 இடங்களை பிடித்த தலா 3 பேர் வீதம் மொத்தம் 250க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழா அரங்கு நுழைவாயில் பகுதியில் இருந்த பவுன்சர்கள், இசிஆர் சாலையிலேயே அனைத்து மாணவர்கள், பெற்றோர் வந்த வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து, அழைப்பிதழுடன் வரும் வாகனங்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

தவெக தலைவர் நடிகர் விஜய் காலை 9.10 மணியளவில் அரங்குக்கு வந்தார். 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் விஜய் பேசும்போது, ‘‘தேர்தலில் பணம் கொடுத்தாலும் என்ன செய்ய வேண்டாம் என்பது உங்களுக்கு தெரியும்.

தேர்தலுக்கு பணம் வாங்காதீர்கள். சாதி மதத்தை ஒதுக்கி வையுங்கள். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை விற்கும்போது சாதி மதம் பார்ப்பதில்லை. சமீபத்தில் தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி நடந்தது. அண்மையில் நடந்த மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வில் தந்தை பெரியாருக்கு சாதிய சாயம் பூசுவது போன்று ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பறவையைப் போல் சுதந்திரமாக, தைரியமாக, நம்பிக்கையுடன் பறக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

நீட் தேர்வுதான் வாழ்க்கை என்பதில்லை. பல படிப்புகள் உள்ளன’’ என்றார். முன்னதாக, மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியால், இசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசாருக்கும் பவுன்சர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு உணவு பரிமாற வந்த மாற்றுத்திறனாளி வழுக்கி விழுந்து கால் முறிந்தது. பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாற்றுத்திறனாளி ஒருவர் வழுக்கி விழுந்து காயமடைந்ததை செய்தியாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தபோது, தவெகவினர் அவர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டல் விடுத்தனர்.