ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருந்தால் போதும். பிரச்னை அன்றே முடிந்து போய் இருக்கும். இன்று உலக அளவில் டெல்லி போராட்டம் டிரெண்ட் ஆகி விட்டது. இலங்கை, வங்கதேசம், நேபாளம் போல இந்தியாவிலும் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லம், ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட மாணவர்கள் பேரணியாக சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
தர்மேந்திர பிரதான் என்ற ஒற்றை நபரை விட்டுக்கொடுக்காமல் பிரதமர் மோடி காட்டும் பிடிவாதம் இன்னும் அந்த வலைக்குள் எத்தனை பேரை இழுத்துக்கொண்டு செல்லுமோ என்பது தெரிய வில்லை. ஏன் பா.ஜ ஆட்சிக்கு கூட இது ஆபத்தாக முடியலாம். 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்து தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டது. இதே போல் 17 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் குளறுபடியால் மேற்படிப்புக்கான லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு பாதிக்கப்பட்டது.
இந்த பிரச்னையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆன்லைனில் அமெரிக்காவின் பாஸ்டனில் உயர் கல்வி பயின்று வரும், மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த அபிஜித் தீப்கே என்பவர் உருவாக்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நீட், சிபிஎஸ்இ, கியூட், எஸ்எஸ்சி போன்ற தேர்வுகளில் நடந்த குளறுபடிகளை மையமாக வைத்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்ய தொடங்கியது.
டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் இருந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளான ஜூலை 20ம் தேதி நாடாளுமன்றத்தை பேரணி செல்ல இருப்பதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்கும்படி மாணவர்கள், பெற்றோர் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அபிஜித் தீப்கே அழைப்பு விடுத்தார்.
பல்வேறு நகரங்களில் இருந்து பஸ், ரயில்களில் வந்த இளைஞர்கள் முதுகில் பையுடன் நேரடியாக போராட்ட களத்திற்கு விரைந்தனர். சீருடை அணிந்த பள்ளி மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும், முதியவர்களும் திரளாக பேரணியில் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தை நோக்கி சென்ற போராட்டக்காரர்கள், சன்சத் மார்க் காவல் நிலையத்துக்கு வெளியே பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி செல்ல முற்பட்டனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் ஒன்றிணைந்து தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீச தொடங்கினர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து விட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்பதால், நாடாளுமன்றத்தின் வடக்கு புறம் இருக்கும் கேட் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வழியை இழுத்து மூடினர். தடியடி காரணமாக பல மாணவர்கள், இளைஞர்கள் ரத்த காயம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் அன்னா ஹசாரே போராட்டத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் போராட்டம் தொடங்கி உள்ளது. இந்த முறை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்துள்ளனர். தடியடிக்கு பதில் கேட்டு ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர். பிரச்னை விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. முதலிலேயே முடிப்பது நல்லது. பிடிவாதம் பிடித்தால் ஆட்சி மாற்றத்திற்கு கூட வழிவகுத்து விடலாம்.
