தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்த நாள் முதல் அமைச்சர்களின் நடவடிக்கைகள் சினிமா பாணியில் இருப்பதை மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள். இவர்களை பார்த்து அரசு அதிகாரிகளும், காவல்துறையும் கூட தங்கள் கடமையை நிறைவேற்றுவதை விட்டு ரீல்ஸ் போடுவதில் குறியாக இருக்கின்றனர். மக்களுக்கு தங்கள் மீது வெறுப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக சமூக ஊடகத்தில் ஒரு தரப்பினரை தயார் செய்து தவெக அரசின் ஒவ்வொரு பணியையும் ஆஹா… ஓஹோ என்று புகழவைத்து இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருகின்றனர்.
தவெக அரசு வெறும் கவர்ச்சி அரசு. ஏழை மக்கள், மீனவர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோர் நலன் சார்ந்த திட்டங்களை வகுக்கும் தொலைநோக்கு பார்வை இல்லாத அரசு. அதனால் தான் திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களின் மீது வெற்றி என்ற ஸ்டிக்கரை ஒட்டி, அந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திவிட்டது போன்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள்.
அனைத்து பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம், மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 ஆகிய அறிவிப்புகள் இடம் பெறவில்லை. தற்போதைய அரசின் நிதிநிலை சீராகவே 2 ஆண்டுகள் தேவைப்படும் என்கிறார் நிதி அமைச்சர். அப்படியென்றால் மகளிர் நல திட்டங்கள் தற்போதைக்கு அமல்படுத்தப்படாது என்பது உறுதியாகிவிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிடமாடல் ஆட்சி அமைந்த போது கொரோனா பரவல் ஒருபுறம், அரசு நிதி ஆதாரம் ஸ்திரதன்மை இல்லாமல் இருந்தது.
ஆனால் நிதி நிலையை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை அவரிடம் இருந்ததால் மகளிர் உரிமை தொகை, மாணவர்கள் கல்வி உதவி தொகை உள்பட அனைத்து திட்டங்களையும் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே அமல்படுத்த தொடங்கினார். ‘இயற்றலும், ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயை பெருக்கி, அதை பாதுகாத்து திட்டமிட்டு செலவிடுவது தான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணம் என்பதற்கிணங்க திமுகவின் திராவிட மாடல் ஆட்சி அமைந்திருந்தது.
ஆனால் தற்போதைய தவெக ஆட்சிக்கு நிதி ஆதாரங்களை பெருக்கவும் தெரியவில்லை. முதலீடுகளை கவரவும் தெரியவில்லை. இது குறித்து அனுபவமிக்க தலைவர்கள் ஆலோசனை, அறிவுரை கூறினால் அதை செவி கொடுத்து கேட்கவும் தயாராக இல்லை. ‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு’ இடித்து கூறும் சான்றோர்களின் கருத்துகள் தங்களுக்கு பொருந்தாதவையாக இருந்தாலும் அதை செவிமடுத்து கேட்டு பொறுமையுடன் ஏற்கும் பண்பு அரசனுக்கு வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
தொழில்வளர்ச்சிக்கு விமானநிலையங்கள் மாநிலத்துக்கு அவசியம். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சியை தவெக அரசு கைவிட்டுள்ளது. அதே போன்று முந்தைய ஆட்சியில் ஒசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்ற திட்டத்தையும் கிடப்பில் போட்டுவிட்டது புதிய அரசு.
இதனால் தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்கின்றன. தமிழகம் ரீல்ஸ் மோகத்தில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. தொழில், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறையை கைவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் இந்த ஸ்டிக்கர் அரசு கவனம் செலுத்தி தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.



