Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பதவி விலகுவாரா?

இன்று, நேற்றல்ல... நீட் தேர்வு முறைகேடு விவகாரம் கடந்த 7 ஆண்டுகளாகவே தொடர்கிறது. 2019ம் ஆண்டில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலம் ஒரு மாணவர் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது இந்தியா முழுவதும், நீட் மீதான நம்பகத்தன்மையை சுக்குநூறாக நொறுக்கியது. தற்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து, அதனால் மறுதேர்வு நடத்திய கொடுமையும் அரங்கேறியிருக்கிறது.

நீட் மட்டுமா? புதிய கல்விக்கொள்கை உள்பட கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் விமர்சனத்திற்குள்ளாகிறது. ஒன்றிய கல்வித்துறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, தலைநகர் டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியை (சிஜேபி) சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியது, கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டியது, தண்ணீரை பீய்ச்சியடித்தது உள்ளிட்ட சம்பவங்களால், தலைநகரமே பரபரப்பின் உச்சியில் இருந்து வருகிறது.

இதுதொடர்பாக தீவிர நடவடிக்கைகள் எடுக்காமல் விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்பதும், சாதாரண முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதையும் போராட்டக்காரர்கள் விரும்பவில்லை. டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகத்திலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு என்ற பெயரில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகளை புறக்கணித்து நீட் தேர்வு ரத்து மற்றும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சகட்டமாக, மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு இணையான போராட்டமாக தமிழகத்தில் இப்போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

இதை மனதில் கொண்டு சென்னை மெரினா கடற்கரையில் யாரையும் அனுமதிக்கவில்லை. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மாணவர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர். பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பொறுத்தவரை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுதான் முக்கிய கோரிக்கை.

போராட்டத்தின் தீவிரத்தை முன்பே உணர்ந்து, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்னை தீர்ந்திருக்கும். நேற்று கரப்பான் பூச்சி தரப்பினர், ஒன்றிய அமைச்சர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (இன்று) வரை அவகாசம், ஒன்றிய அரசு தரப்பில் கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவதால், தற்போதைய சூழலில் தர்மேந்திர பிரதான் பதவி விலகவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒன்றிய அரசு இனியாவது மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடாமல், கல்வி தொடர்பான விவகாரங்களில் யாரையும் பாதிக்காதவாறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். மாநில கல்விக்கொள்கையை பாதிக்கும் வகையில் செயல்படக்கூடாது. உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே இந்திய மக்களின் ஒட்டுமொத்த எண்ணமாகும்.