Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கூடவே இருந்து விருப்பமனு கொடுத்து மாஜி அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த ஆதரவாளர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சுற்றுப்பயணம் செல்லும் மலராத கட்சி தலைவர் கூட்டத்தை காண்பிக்க பல ஊர்களில் இருந்து ஆட்களை அழைச்சிட்டு போய் வீதியை நிரப்புகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மலராத கட்சியின் மாநில தலைவர் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வெயிலூரில் சில நாட்களுக்கு முன்பு அந்த கட்சியின் பொதுக்கூட்டம் நடந்துச்சு.. இந்த கூட்டத்துக்கு உள்ளூரில் இருந்து ஆட்களே வரவில்லையாம்.. அதுவும், மலையானவர் பொறுப்பில் இருந்தபோது நிர்வாகிகளாக இருந்தவர்கள் முழுமையாக கூட்டத்தை புறக்கணித்தார்களாம்.. இதை எதிர்பார்த்துதான், இப்போதைய தலைவர் உள்ளூர் ஆட்களை நம்பாமல், சென்னை, காஞ்சிபுரம், பெரும்புதூர் என்று பல ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து வீதியை நிரப்பினாராம்.. இதற்காக, வாகனங்களுக்கும், ஆட்களுக்கும் இவரே செலவு செய்தாராம்.. இவ்வாறு ஆட்களை அழைத்து வந்து வெயிலூரின் பிரதான சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பார்த்த வெயிலூர் மக்கள், எதுக்கு இந்த பந்தா, இவங்க என்னமோ, காசே கொடுக்காம மக்கள் வர்ற மாதிரி சீன் காமிக்கிறாங்க.. மத்த கட்சிங்க ஆட்களை அழைத்து வந்தா, காசுக்கு அழைச்சிட்டு வர்றதா சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியில் விருப்ப மனு கொடுத்து மாஜி அமைச்சருக்கே அதிர்ச்சியை கொடுத்துவிட்டாராமே நெருங்கிய ஆதரவாளர்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இலை கட்சி சார்பில் விருப்பமனு பெறப்பட்டது. இதில், கடலோர மாவட்டத்தில் மாஜி அமைச்சர் மணியானவருக்கு தெரியாமல் அவரது நெருங்கிய ஆதரவாளரான பெயரின் முன்னால் கோல்டை அடைமொழியா கொண்டவர் போட்டியிட விருப்பமனு அளித்திருக்காரு.. இந்த தகவல் தெரிய வந்த மாஜி அமைச்சர் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகிறாராம்.. தன்னுடன் கூடவே இருந்து கொண்டு நமக்கு தெரியாமலே விருப்பமனு தாக்கல் செய்திருக்காரே என சக ஆதரவாளர்களிடம் மாஜி அமைச்சர் புலம்பி இருக்காரு.. கடலோர மாவட்ட இலை கட்சியில் இந்த டாப்பிக் தான் அரசல்புரசலாக பேசப்பட்டு வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒன்றில் நடந்த கோல்மால் வெட்ட வெளிச்சமாகி பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கடைகோடி மாவட்டத்துல வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று செயல்படுது.. இந்த கூட்டுறவு சங்கத்துல பொறுப்புல இருந்தவங்க சிலர் சேர்ந்து, ஏழை குடும்பத்தை சேர்ந்த பலர் கிட்ட ஆதார் அட்டையை வாங்கி, அவங்க பெயரில் அவுங்களுக்கே தெரியாமல் ரூ.10 லட்சம் வரை கடன் எடுத்து இருக்காங்க.. இதில் கொஞ்சம் பணத்தை மட்டும் கட்டி இருக்காங்க.. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல கடனை கட்டாமல் விட்டு விட்டாங்களாம்.. சமீபத்தில் புதுசா மேலாளர் பொறுப்பேற்று ஆவணங்களை பார்த்து கடன் தொகை கட்டாமல் இருந்தது மற்றும் வட்டி என சேர்த்து மொத்தம் ரூ.8 லட்சம் வரைக்கும் வருவதாக கணக்கு பார்த்து கடன் வாங்கி இருந்தவங்க முகவரிக்கு நோட்டீசு அனுப்பி இருக்காரு.. நோட்டீஸ் போன பிறகு தான் தங்கள் பெயரில் கடன் வாங்கி இருப்பது, அந்த அப்பாவி ஏழை குடும்பங்களுக்கு தெரிய வந்துருக்கு.. பதறி அடிச்சு வங்கிக்கு வந்து விசாரிக்கிறாங்க.. ஆவணங்களை பார்த்த போது பொறுப்பில் இருந்த சிலர், போலியாக கையெழுத்தை போட்டு அப்பாவிகள் பெயரில் கடன் தொகையை எடுத்தது தெரிய வந்திருக்கு.. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரிச்சிட்டு இருக்கிறார்களாம்.. முதற்கட்டமாக கொஞ்சம் தொகையை திரும்ப தருகிறோம். மீதி தொகையை கட்ட அவகாசம் கொடுங்க என்று ஏமாற்றியவர்கள் வங்கி மேலாளர் கிட்ட அவகாசம் வாங்கி இருக்கிறார்களாம்.. தப்பு செய்தவர்கள் மீது எப்ஐஆர் போட்டு நடவடிக்கை எடுக்காமல், மோசடியாக திருடிய பணத்தை கட்டினால் விட்டு விடலாம் என்பது என்ன நியாயம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக்கும் மலராத கட்சியில் சீட் கேட்டு மல்லுக்கட்டு நடக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மலராத கட்சியில், யார் யார் போட்டியிடுவது என்பதில் கடும் மல்லுக்கட்டு உருவாக துவங்கியுள்ளதாம்.. இலைக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள மலராத கட்சிக்கு மொத்தமே 2 இடங்கள்தான் ஒதுக்க உள்ளதாகவும், அந்த இரண்டு இடங்களிலுமே மாற்றுக்கட்சியில் இருந்து மலராதக் கட்சிக்கு வருகை தந்த இரு நபர்கள் குறி வைப்பதாகவும் புகைச்சல் எழுந்துள்ளது.. இதனால், மலராதக் கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளதாம்.. அதனால், சீட் யாருக்கு... என்பதில் இப்போதே கடும் போட்டி நிலவுகிறதாம்... தற்போதைய சூழ்நிலையில், இலைக்கட்சியில் இருந்து மலராதக் கட்சிக்கு தாவிய சேலஞ்சான முன்னாள் ச.ம.உ., கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வரிந்து கட்டுகிறாராம்.. இதேபோல், கொங்கு கட்சியில் இருந்து மலராதக் கட்சிக்கு தாவிய இன்னொருவர் சிங்காநல்லூர் தொகுதிக்கு குறி வைக்கிறாராம்.. இருவருமே பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால், செலவினங்களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்னு மார்தட்டுகிறார்களாம்.. இதனால், உண்மையான விசுவாசிகளுக்கு சீட் மறுக்கப்படுமோ என்ற அச்சம் மலராதக்கட்சி முழுவதும் பரவியிருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.