வண்ணத்துப் பூச்சியை பார்க்கும் பொழுதெல்லாம் தட்டாம் பூச்சிக்குப் பொறாமை. ஒருநாள் அது வண்ணத்துப்பூச்சியிடம் கேட்டது, உன்னைப்போல் நானும் பூச்சி தான் ஆனால் உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகான இறக்கைகள். நீ பூக்களில் தேன் எடுக்கும் காரணத்தினாலா?இல்லை, உன்னிடத்திலேயே தேனிருக்கும் காரணத்தினாலா? என்று கேட்டது.
வண்ணத்துப்பூச்சி சொன்னது “இரண்டுமே இல்லை” நான் என்னைக் கூட்டுப்புழுவாய்க் குறுக்கி வெளியே வராமல் எனக்குள்ளேயே சுயகட்டுப்பாட்டுடன் பல நாட்கள் உணவின்றி தவம் இருந்து தியானம் செய்தேன். அதனால் தான் எனக்கு இந்த வண்ணச் சிறகுகள் முளைத்தன என்றது.
தவமிருக்காமல் வரம் கிடைக்குமா? ஆம்!அந்த தவம்தான் வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்கள். தவம் ஒரு வகையில் பொறுமையின் இருப்பிடம்.பொறுமை என்றதும் நினைவில் நிழலாடு கின்றன. ஜொலிக்கும் வைரக்கற்கள்.தெரியுமா உங்களுக்கு? கரித்துண்டுகள்தான் வைரத்தின் பிறப்பிடம்.எப்படி இது வைரமாக ஜொலிக்கின்றது? பொறுமை தான், அதற்கு காரணம்.
ஒரு கதை,நகைக்கடையில் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த வைரக்கல்லை பார்த்து, தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது. எனக்கு ஏன் மதிப்பில்லை! நானும் ஒரு கல் தானே என்று ஓலமிட்டது.தெருவோரத்தில் கிடந்த கற்பாறை கூறியது.ஏ குறுணிக்கல்லே, காலம் முழுதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக் கொண்டு பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய். ஆனால் இந்த வைரக்கல் அப்படியா, வைரமாகும் வரை வெளியில் தலை காட்டுயதே இல்லை. எங்கோ மண்ணில் மறைந்து அது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டிருந்தது,அப்படி என்றால்? என்று இழுத்தது குறுணிக்கல்.அதற்கு கற்பாறை சொன்னது “நிறைவாகும் வரை மறைவாக இரு” என்றது.
காற்றின் அழுத்தம் அதிகமானால் பலூன் வெடிக்கும் என்பது அறிவியலில் நாம் அறிந்த உண்மை.ஆனால் அதே அறிவியல் பூமியின் வெப்பம்,அழுத்தம், ஆகியவற்றுக் கெல்லாம் ஆட்பட்டு மண்ணில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் புதைந்து கிடக்கும். கரித்துண்டு வைரமாக உரு மாற்றம் பெறும் ரசவாதமும் உண்மையே!
இந்த வைரம், வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தருகின்றது. காற்றின் அழுத்தத்தைக் கூட தாங்கமுடியாமல் உடைந்துபோகும் பலூன்களாகத்தான் என்று நம்மில் பலர் இருந்துகொண்டிருக்கின்றார்கள்.
இளமை மதிப்பு மிக்கது.மண்ணைத் துளைத்துக் கொண்டு வெளியே வரும் விதையின் முயற்சியைப் போல, முட்டையின் உள்ளிருந்து அலகால் கொத்திக் கொத்தி உலகத்தைக் காண வரும் குஞ்சினைப் போல,கூட்டுப் புழுவாய் இருந்து போராடிப்,போராடிப் பறக்கக் கற்றுக் கொண்டு வானில் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியை போல நிறைந்த மனமுடையவர்களாய் இளைஞர் சமுதாயம் உருவாக வேண்டும்.
இளமை என்பது வைராக்கியத்தின் விளை நிலம்.
அப்போது விதைக்கும்இலட்சியங்களே இறுதிவரை உயர்ந்த இடத்தை நோக்கி இழுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவை.ஒவ்வொருவரிலும் வாழ்வின் உயர்வுக்கான ஆற்றலின் ஊற்று ஒன்று இருக்கிறது.ஆர்வம் இருந்தால் பெருக்கெடுக்கச் செய்யலாம்.இதற்கு உதாரணமாக இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் மேயர் தேர்தலில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரினி சம்பத் போட்டியிடுகிறார். அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் விரைவில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய பெண் என்ற பெருமையை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரினி சம்பத் பெற்றுள்ளார்.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 31வயதான ரினி சம்பத் , தனது 7-ஆவது வயதில் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக தலைநகர் வாஷிங்டன் டிசி-யில்தான் ரினி சம்பத் வசித்து வருகிறார்.
இவர், வாஷிங்டன் டிசி-யில் மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 4,500 வாக்காளர்களின் கையெழுத்துகளைப் பெற்று, தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்.அதுமட்டுமின்றி, இவர் பெற்றுள்ள கையெழுத்துகளின் எண்ணிக்கை, தேவைப்படும் எண்ணிக்கையைவிட இருமடங்குக்கும் அதிகமாகும்.
இதுகுறித்து, ரினி சம்பத் பேசுகையில், அமெரிக்காவில் கனவைத் தேடிவந்த நான், இப்போது வாஷிங்டன் டிசி மக்களின் தேவைகளுக்காகப் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், அமெரிக்காவின் பொருளாதாரத்தில் தெற்காசிய சமூகம் முக்கிய பங்களித்தாலும், அமெரிக்க அரசாங்கத்தில் தெற்காசிய சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது.இப்போது, மேயர் தேர்தலில் நான் போட்டியிடுவது, மற்றவர்களுக்கும் ஓர் உந்துதலாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேயர் தேர்தலில் போட்டியிடும் ரினி சம்பத், நகரின் அடிப்படைச் சேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார்.சீரான சாலைகள்,கழிவுநீர்க்கசிவைத் தடுத்தல்,குடிநீர்க் குழாய்கள், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் உள்ளிட்டவையே இவரின் முக்கிய வாக்குறுதிகளாக உள்ளன.
வாஷிங்டன் டிசி-யில் வருகிற ஜூன் 16 ஆம் தேதியில் முதன்மைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், நவம்பர் மாதத்தில் நடைபெறும் மேயர் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.
ரினி சம்பத் மேயராக வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை தீர்மானித்து, அதற்கான சவால்களையும் எதிர்கொண்டு வருகிறார்.எதை சவாலாக ஏற்கிறோமோ அதற்கு வெற்றி கிட்டவே செய்கிறது.அதற்குத் தேவை வைராக்கிய உணர்வே.அதுவே வாழ்வை வானின் உயரத்திற்கு உயர்த்துகிறது. இவரைப் போலவே நீங்களும் உங்கள் இலக்கில் உறுதியோடு இருங்கள். ஒன்றை அடைவதற்காக போராடுவது, அதைத் தேடி அலைவது, அதை கண்டுபிடிப்பது, என்றும் மாறாத உறுதியுடன் இருப்பது. இதுவே வைராக்கியத்தின் குணமாகும்.இந்த உறுதி தான் சக்தியைக் கொடுக்கிறது.இந்த சக்தி தான் வெற்றியைக் கொடுக்கிறது என்பதில் ஐயமில்லை.


