Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது அதிமுக தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்து வரும் பாஜ தமிழர்களின் எதிரி: அண்ணா வழியில் அயராது உழைப்போம் என தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்ணா வழியில் அயராது உழைத்தால்தான் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைக்க முடியும். இந்தி திணிப்பை என்றும் எதிர்த்து இன்பத்தமிழ் மொழியைக் காத்திட முடியும், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல முடியும். மாநிலத்தில் சுயாட்சியையும் மத்தியில் கூட்டாட்சியையும் நிலைநாட்ட முடியும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார் கலைஞர்.

திமுகவை தலைமையேற்று நடத்திய அந்த இருபெரும் தலைவர்களையும், ஐம்பெரும் முழக்கங்களையும் நெஞ்சில் ஏந்தி திமுக எனும் அரசியல் பேரியக்கத்தை உங்களில் ஒருவனான நான், உங்களின் பேராதரவுடன் வழிநடத்தி வருகிறேன். உங்களில் ஒருவனான என்னுடைய இந்த பயணத்திற்கும் ஓயாத உழைப்பிற்கும் உந்து விசையாக இருப்பவர்கள் அண்ணாவும், கலைஞரும், இனமானப் பேராசிரியர் உள்ளிட்ட கட்சியின் முன்னோடிகளும் தான். அதனால் தான் எதிர்ப்புகளையும் வஞ்சகத்தையும் எதிர்கொள்ளும் போராட்டமாகவே முதல்வர் பொறுப்பை அனுபவித்தபடி, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்து வருகிறேன்.

1967ல் தொடங்கி, 2026ல் இன்று நடைபெறுகிற திராவிட மாடல் அரசு வரை, அண்ணா வகுத்துத் தந்த திராவிடப் பாதையைப் பின்பற்றியே ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். நம்மை எதிர்ப்பவர்கள் ஆட்சிக்கு வந்தபோதும், அண்ணாவின் பெயரைத்தான் உச்சரிக்க வேண்டியிருந்தது. அதுதான் திமுக எனும் பேரியக்கத்தின் கொள்கைக்கான வெற்றி. இப்போதும் நாம் அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பாஜ அரசு.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜ அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கும் அதிமுக. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பாஜவின் நோக்கமாக உள்ளது. அதற்கு மவுன சாட்சியாக அமைதி காக்கிறது அதிமுக. மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்பதைத் திராவிட மாடல் அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒன்றிய பாஜ அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. திராவிட மாடலின் குரல், பாஜ ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது. மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது, சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லாத அதிமுக.

மக்களுக்காகவே செயல்படுகிற மக்கள் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வைத்து, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திட வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் பதிந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்து வரும், தமிழர்களின் எதிரியான பாஜவும் அதனுடன் இணைந்துள்ள அதிமுகவும் நமக்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை, அண்ணாவின் தம்பிகளான-கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களால் தான் முறியடித்திட முடியும். அந்த உறுதியை ஏற்கும் வகையில், இன்று அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியில் உங்களில் ஒருவனான நானும் திமுக முன்னோடிகளும் திமுக தொண்டர்களும் பங்கேற்கிறோம்.

என்றென்றும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் அண்ணாவின் நினைவு நாளில் தமிழ்நாடெங்கும் அவரது நினைவைப் போற்றும் வகையில் திமுக கிளைகள்தோறும் அண்ணாவின் படத்திற்கு மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தி, கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்று, தேர்தல் களப்பணிகளுக்கு ஆயத்தமாவோம். அண்ணா வழியில் அயராது உழைப்போம். மக்களிடம் செல்வோம். அவர்களின் ஆதரவுடன் சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்பதை திராவிட மாடல் அரசு ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒன்றிய பாஜ அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

* திராவிட மாடலின் குரல், பாஜ ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது.

* மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது, சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லாத அதிமுக.