Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநில கல்விக் கொள்கை தந்த முதல்வருக்கு நன்றி: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அறிக்கை

சென்னை: மாநில கல்விக் கொள்கை தந்த முதல்வருக்கு நன்றி: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. அதனால்தான் தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கும் கல்வி சென்றுசேர வேண்டுமெனத் திராவிட இயக்கத் தலைவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதைப் பொறுக்க முடியாத, சனாதன ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் அமைப்புகள் - அதன் அடியாளாகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க அரசு மூலம் கல்வியைக் குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே என்றாக்கி, ஏழை எளிய மக்களுக்குக் கல்வியை எட்டாக்கனியாக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை எனும் மக்கள் விரோதக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.

சமூகநீதிக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கையை ஒன்றிய பா.ஜ.க அரசு எப்போது அறிமுகம் செய்ததோ அப்போதிலிருந்து இப்போது வரை அதன் தீமைகளைச் சுட்டிக்காட்டி, அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதோடு அதற்கு மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்து இந்தியாவின் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் திராவிட நாயகர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மத வெறுப்பை போதித்து, மத மேலாண்மைகளையும் புராண இதிகாசப் புரட்டுகளையும் கல்வி எனும் பெயரில் காவி கொள்கையை புகுத்த நினைக்கும் ஒன்றிய அரசுக்குத் தக்க பாடம் புகட்டும் வகையிலும், சாதியைத் தூக்கிப் பிடிக்காத சமத்துவத்தைப் போற்றும் வகையிலும் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

8ஆம் வகுப்பு வரை அனைவரும் பாஸ், 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து

10,11,12 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வுக்கு தயாராகும்போது மாணவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கும் ஆளாகினர். எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தொடர்ச்சியாக வைத்த கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்பதை மாநிலக் கொள்கையில் சேர்த்து வெளியிட்டிருப்பது இலட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும்,

நம் முதல்வர் கொடுத்த சிறந்த பரிசு. 3ஆம் வகுப்பு, 5 ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு எனத் தொடர்ச்சியாக மாணவர்களைத் தேர்வு எனும் சோதனைக் கூடத்தில் வைத்து அவர்களின் கல்வி கற்கும் கனவைச் சிதைத்து, தேர்வில் தோற்பவர்களைக் குலக் கல்வி எனும் மோசடி வலையில் சிக்க வைக்க முயன்ற தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக 1 முதல் 8-ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' என அறிவித்திருப்பது ஆகச் சிறந்த செயல்திட்டம். கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த ஆல் பாஸ் திட்டம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என எப்போதும் மக்கள் நலனை யோசிக்கும் நம் முதல்வரின் இந்தச் செயல்திட்டம் இடைநிற்றலைக் குறைக்கும். அதிலும் குறிப்பாக ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலை முற்றிலுமாகக் குறைக்கும் அருமருந்து.

மும்மொழிக் கொள்கைக்கு சவுக்கடி

இருமொழிக் கொள்கையில் உறுதி!

ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையை நாடு முழுவதும் திணிக்க முயலும் நிலையில், படிக்கத் தாய்மொழி தமிழும், உலகத்தை தொடர்புகொள்ள இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என பேரறிஞர் அண்ணா வழியில், முத்தமிழறிஞர் கலைஞர் காப்பாற்றிய இருமொழி கொள்கையில்தான் தமிழ்நாடு எப்போதும் இருக்கும் என உறுதிபடத் தெரிவித்திருப்பது இந்தியைத் திணித்து இந்திய ஒன்றியத்தின் பன்மொழித் தத்துவத்தைச் சிதைக்கத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு முதல்வர் அவர்கள் கொடுத்த சவுக்கடி.

பெண்கல்விக்கு முக்கியத்துவம் இடைநிற்றலை முற்றும் முழுதாக அழித்தல்!

தற்போது மாவட்டம் தோறும் 'மாதிரிப் பள்ளிகள்' செயல்பட்டு வரும் நிலையில் இனி வட்டார அளவில் மாதிரிப் பள்ளிகள் 'வெற்றிப் பள்ளிகள்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என்பதும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கி அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருப்பது மாணவர்களின் மீதான முதலமைச்சரின் அக்கறையைக் காட்டுகிறது. இது தவிர பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு ஏதுவான கற்றல் சூழலை உருவாக்கியிருப்பதோடு ஆசிரியர்களுக்குத் தனிப் பயிற்சி, மலைவாழ் மாணவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வியில் தனிக் கவனம் செலுத்தி அவர்களுக்குச் சிறப்பு கல்வி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதும் மனதாரப் பாராட்டத்தக்கவை.

தமிழ்நாடு எப்போதும் இந்தியாவிற்கு முன்னுதாரணமான மாநிலம் என்பதை மாநில கல்விக் கொள்கையின் மூலம் நம்முடைய திராவிட நாயகர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். நம்முடைய கல்விக் கொள்கையைப் பின்பற்றி இனி மற்ற மாநிலங்கள் அவர்களுக்கென பிரத்தியேக கல்விக் கொள்கையை உருவாக்குவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மோசமான சூழலில் சிக்கியுள்ள கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அனைத்தையும் சாத்தியப்படுத்தி வரும் நம் சாதனை நாயகர் இதிலும் சரித்திரம் படைப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரும் தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு மக்கள் களத்திலும், போராட்டக் களத்திலும் மாணவர் அணி உறுதுணையாக நிற்கும்

தேசியக் கல்விக் கொள்கை எனும் ஒன்றிய அரசின் நயவஞ்சகத்துக்குப் பதிலடியாக மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ள திராவிட மாடல் நாயகர் முதலமைச்சருக்கும் உற்றதுணையாக இருந்த துணை முதல்வருக்கும் அதைச் செயல்படுத்திய அமைச்சர் அவர்களுக்கும் மாணவர் அணி சார்பில் நன்றியை உரித்தாக்குகிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையை கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள், துண்டுபிரசுரங்கள், போஸ்டர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாணவர் அணி கொண்டு சேர்க்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.