மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதே பாஜ அரசின் மந்திரம்: சட்டீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
ராய்ப்பூர்: ‘மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதே அரசாங்கத்தின் மந்திரம்’ என சட்டீஸ்கரில் பிரதமர் மோடி கூறி உள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் நவ ராய்ப்பூரின் அடல் நகரில் புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை திறந்து வைப்பதற்காக நவ ராய்ப்பூருக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக சட்டீஸ்கர் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி உதயமானது.
இதன் 25ம் ஆண்டு நிறுவன தினமான நேற்று மாநிலத்தில் சாலைகள், தொழில், சுகாதாரம் மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைகளில் ரூ.14,260 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், பிரம்ம குமாரிகளின் ஆன்மீக கற்றல் மற்றும் தியானத்திற்கான சாந்தி ஷிகார் மையத்தைத் திறந்து வைத்த அவர் பேசியதாவது:
இன்று உலகில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், பேரழிவு ஏற்படும் போதெல்லாம், உதவி வழங்க இந்தியா நம்பகமான கூட்டாளியாக ஆதரவுக்கரம் நீட்டுகிறது. இந்தியா எப்போதும் முதலில் உதவி செய்யும் நாடாக இருந்து வருகிறது. ஒவ்வொரு உயிரினத்திலும் சிவனைக் காண்பவர்கள் நாம். நமது பாரம்பரியத்தில், ஒவ்வொரு மத சடங்கிலும் ‘உலகம் செழிக்கட்டும், அனைத்து உயிரினங்களிடையேயும் நல்லெண்ணம் மேலோங்கட்டும்’ என்ற தீர்மானம் அடங்கியிருக்கிறது.
மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற மந்திரத்தால் வழிநடத்தப்பட்டு, இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதற்கான விக்சித் பாரத் பணியில் ஒன்றிய பாஜ அரசு ஈடுபட்டுள்ளது. நான் இங்கு விருந்தினராக வரவில்லை. உங்களில் ஒருவன் நான். இவ்வாறு கூறிய பிரதமர் மோடி மாநிலத்தின் 25வது உதய தினத்தையொட்டி சட்டீஸ்கர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.முன்னதாக, ‘தில் கி பாத்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பிறவி இதய நோய்களால் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்ட 2,500 குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
* செழிப்பு, பாதுகாப்பின் அடையாளம் சட்டீஸ்கர்
புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இந்த சட்டப்பேரவை கட்டிடம் வெறும் சட்டங்களை இயற்றுவதற்கான இடம் மட்டுமல்ல, சட்டீஸ்கரின் தலைவிதியை வடிவமைப்பதில் ஒரு துடிப்பான மையமாகவும் சக்தியாகவும் உள்ளது என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் ’’ என்றார். முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாயின் சிலையை மோடி திறந்து வைத்தார்.