Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநிலத்திலேயே முதல்முறையாக நெல்லையில் கல்லீரல் பாதிப்பை அறியும் பைபிரோ ஸ்கேன் பரிசோதனை முகாம்

*பொதுமக்கள் பயனடைந்தனர்

நெல்லை : கல்லீரல் பாதிப்பை அறியும் பைபிரோஸ்கேன் எனும் பிரத்யேக கருவி மூலம் நடத்தப்பட்ட பரிசோதனை முகாம் மாநிலத்திலேயே நெல்லையில் முதல்முறையாக நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் பருமன் அதிகரிப்பு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் மதுபழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆரம்ப நிலையிலேயே கொழுப்பு படிதல் கண்டறியப்பட்டால், உணவு முறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பதை கருத்தில் கொண்டு அரசு கல்லீரல் குறித்த மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.

நெல்லை பேட்டை அருகே கல்லூரில் உள்ள மாதிரி ஊரக சுகாதார ஆராய்ச்சி மையத்தில் கல்லீரலில் கொழுப்பு படிதல் மற்றும் செயலிழப்பு குறித்த இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடந்தது. நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதிபாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்ரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் மருத்துவப் பிரிவு துறைத் தலைவர் கந்தசாமி என்ற குமார் தலைமையில் முகாம் நடந்தது.

கிராமப்புற மக்களும் கல்லீரல் பரிசோதனை வசதியை பெறும் வகையில், தமிழகத்திலேயே முதன்முறையாக பைபிரோஸ்கேன் எனும் பிரத்யேக கருவி மூலம் கல்லீரலில் கொழுப்பு மற்றும் செயலிழப்பு உள்ளதா? என்பதைக் கண்டறியும் பரிசோதனை இந்த முகாமில் மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். கல்லூர் மாதிரி ஊரக சுகாதார ஆராய்ச்சி மையத்தின் திட்ட அலுவலர் மருத்துவர் சார்லஸ் பொன் ரூபன் தலைமையிலான குழுவினர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.