ஒரு கடற்கரைக் கிராமம் அங்குள்ள ஒரு மீனவ இளைஞனை பார்த்து வேறு ஒருவர் கேட்கிறார் கடல் ஆபத்தான இடமாயிற்று எப்படி துணிச்சலுடன் நீ மீன் பிடிக்கப் போகிறாய்? இளைஞன் சொல்கிறான் என்ன செய்வது நான் மீன்பிடித்தால் தான் உணவு உண்ண முடியும். கேட்டவர் சட்டென்று கேள்வியின் திசைகளை மாற்றுகின்றார். அது சரி உன் தந்தை எப்படி இறந்தார்? அவர் மீன்பிடிக்கச் செல்லும் போது புயலில் இறந்தார். உன் தாத்தா? என் தாத்தா ஒரு முறை அலையில் மாட்டிக் கொண்டு கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு அவரும் கடலுக்குள் இரையானார். இவ்வளவு நடந்து முடிந்த பிறகும் எப்படி உன்னால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடிகிறது. இப்போது அந்த இளைஞன் கேள்வி ஒன்றை கேட்டான்.
உங்கள் தந்தை எப்படி இறந்தார்? அதற்கு அந்த நபர் சொன்னார் நோய்வாய்ப்பட்டு இறந்தார். உங்கள் தாத்தா அவரும் படுக்கையில் நோயில் கிடந்து பாடையாகிப் போனார். இப்படி பரம் பரையே படுக்கையில் கிடந்து இறந்து போயிருக்கிறார்கள். அப்புறம் எப்படித் தினமும் நீங்கள் தைரியமாக படுக்கப் போகிறீர்கள் என்று பதிலுக்கு கேட்டான் அந்த இளைஞன்.
அந்த நபர் பதில் இன்றி மௌனமானார். வாழ்க்கை ஆபத்துகளும், துக்கங்களும், துயரங்களும் நிறைந்ததுதான். அதை நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்ந்துவிட முடியுமா? புறநானுற்று புலவன் சொல்வானே ‘‘நீர் வழிபடும் புனை போல” என்று அதாவது ஆற்றின் ஓட்டத்தில் செல்லும் படகானது அதன் ஓட்டத்தோடு செல்வதைப் போல வாழ்க்கையும் சென்று கொண்டே இருக்க வேண்டும். அந்தப் படகை வழி நடத்திச் செல்கிற ஆற்றைப் போல பிறருக்குப் பயன்படுகிற விதத்தில் இருக்க வேண்டும். யாரும் இங்கே வீணாகி விடக்கூடாது.
இத்தாலி நாட்டில் வின்னோலா என்ற ஊரில் ஒரு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் பாடத்தை கவனிக்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். ஆசிரியர் எட்டிப் பார்த்தார். வெளியே ஜன்னலின் கீழ் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தார். அழுக்கு ஆடையுடன் அவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். ‘‘இங்கிருந்து போய்விடு வகுப்பில் மாணவர்கள் படிப்பதை தொந்தரவு செய்யாதே” என்று ஆசிரியர் கோபமாக கூறினார். அதற்கு சிறுவன் ஐயா நான் தப்பு ஒன்றும் செய்யவில்லை. கடைக்கு போகும் வழியில் சிறிது நேரத்திற்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கேட்டுக் கொண்டிருக்கின்றேன். நான் இங்கு இருக்க கூடாது என்று நீங்கள் சொன்னால் நானே போய் விடுகிறேன் என்று கண்ணீருடன் கூறினான்.படிப்பில் அவ்வளவு ஆசை இருந்தால் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டியது தானே? ஆசிரியர் அமைதியாக கேட்டார்.
ஐயா என் அப்பா ஏழை,அவரால் பள்ளி கட்டணத்தைக் கட்ட முடியாது.
ஆசிரியர் சிறிது யோசித்து முதலில் நீ சொல்வது உண்மைதானா என்று நிரூபி ‘‘நான் நடத்திய பாடங்களில் இருந்து சில கேள்விகள் கேட்கிறேன் பதில் சொல் பார்க்கலாம்” என்றார்.
ஆசிரியரின் பெரும்பாலான கேள்விகளுக்கு அவன் சரியான பதில்களை கூறினான். ஆச்சரியத்துடன் ஆசிரியர், ‘‘தம்பி நாளைக்கு நீ பள்ளிக்கு வா, கட்டணம் பற்றி கவலைப்படாதே என்றார்.
அடுத்த நாள் முதல் அவன் பள்ளிக்குச் சென்றான். கடுமையாக உழைத்து மிக நன்றாக படித்தான். பள்ளிப் படிப்பு முடித்து உடன் அவனுடைய திறமையையும் உழைப்பையும் கண்ட சிலர் அவனுக்கு ‘‘மோடேனா” பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு கிடைக்க உதவினர்.
அச்சிறுவன் யார்? அவர்தான் வரலாற்று பேராசிரியராக மாபெரும் சிந்தனையாளராக, ஒப்பற்ற எழுத்தாளராக இத்தாலி நாட்டின் சரித்திரத்தில் தன் முத்திரையை அழுத்தமாக பதித்திருக்கும் ‘‘லூடோவிக்கோ அன்டோனியோ முரட்டோரி”.
தேடல்களைத் தொடங்கிய எவரும் வாழ்க்கைப் பயணத்தில் வீணாகி விடவில்லை.அவர்கள் எல்லோரும் வரலாற்று ஏடுகளில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இன்றைய உலகிலும் இது போன்று சாதித்து வரலாற்று ஏடுகளில் இடம்பெற வேண்டும் என்று பலரும் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான முதல்நிலைத் தேர்தலில் தமிழ்ப் பெண்ணான நித்யா ராமன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கான மேயர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் முதலிரண்டு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் முதல்நிலைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் பெரும்பாலானோர் தபால் வாக்குகள் மூலமே வாக்குகளை செலுத்திய நிலையில், அந்த தபால் வாக்குகள் தேர்தலுக்குப் பிறகு 7 நாட்கள் வரை பெறப்படுகிறது. இதனால், இறுதி முடிவை அறிவிக்க பல நாட்கள் எடுக்க வாய்ப்புள்ளது.
தற்போதைய லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் மேயராக உள்ள ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான 72 வயது கரேன் பாஸ், ஏற்கெனவே 34.7 சதவிகித வாக்குகளைப் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இவர் மேயர் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது.
இரண்டாம் இடத்துக்கான போட்டியில் கேரள பூர்வீகத்தை கொண்ட லாஸ் ஏஞ்சலீஸின் மாமன்ற உறுப்பினர் நித்யா ராமன் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரமான ஸ்பென்சர் பிராட்டும் உள்ளனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, இரண்டாம் இடத்தில் இருந்த பிராட்டைவிட சில வாக்குகள் அதிகம் பெற்ற நித்யா ராமன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளதாக சிஎன்என் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டியில் எண்ணப்பட்ட வாக்குகளில் சுமார் 40 சதவிகித வாக்குகளை பெற்ற நித்யா ராமன், சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிராட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தில் 1981-ஆம் ஆண்டு பிறந்தவர் நித்யா ராமன் (வயது 45). இவருக்கு 6 வயது இருக்கும்போது, இவரது பெற்றோர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியலும், மசாசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் நகரத் திட்டமிடலும் பயின்றுள்ளார். சென்னையில் துப்புரவு மற்றும் சுகாதார மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி சில காலம் பணியாற்றியுள்ளார். பின்னர், 2013-ல் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் குடி பெயர்ந்த இவர், வீடற்றவர்களுக்கு வீடுகளை கட்டித் தரும் ‘செலா’ என்ற அமைப்பைத் தொடங்கி பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் போன்ற அரசியல் தலைவர்களின் ஆதரவுள்ள வேட்பாளரை தோற்கடித்து, லாஸ் ஏஞ்சலீஸின் நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசிய பெண் என்ற சாதனை படைத்தார். இவர் மாமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலகட்டத்தில் நகர திட்டமிடலில் முக்கிய பங்காற்றினார். வீடற்றவர்களுக்கு குறைந்த விலை வீடுகளைக் கட்டிக் கொடுத்தார்.
தற்போது லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் பதவிக்கான முதல்நிலைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பகுதிவாரியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இறுதியாக முதலிரண்டு இடங்களைப் பிடிப்பவர்களே மேயர் தேர்தலில் நவம்பர் மாதம் போட்டியிடுவார்கள்.நியூ யார்க் நகர் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியான மமதானியைப் போன்று, நித்யா ராமனும் சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படித்தான் வாழ்க்கை தேடலில் முயற்சிப்பவர்கள் எவரும் வீணாகி விடுவதில்லை. நல்ல ஓட்டக்காரர் பாதையின் எல்லையை விட்டுச் செல்வதில்லை.நல்ல பண்பாளர்கள் பிறருக்கு உதவ முனைகின்றார்கள். காரணம் எவரும் இங்கு வீணாகி விடக்கூடாது என்பதால், நித்தியா ராமனை போல நீங்களும் தேடலில் முயற்சியைத் தொடங்குங்கள், வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.
