சென்னை; ஆக.2ல் தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் இதுவரை 9.86 லட்சம் பேர் பயன் அடைந்தனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2025-26-ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக.2ம் தேதி சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த உயர் மருத்துவ சேவை சிறப்பு முகாம் ஒன்றிற்கு 1.08லட்சம் வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்களுக்கு ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில்; நலம் காக்கும்ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் இதுவரை 9.86 லட்சம் பேர் பயன் அடைந்தனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; கடந்த ஆகஸ்ட் 2-ஆம் நாள் தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் திட்டத்தின் மூலம் இதுவரை 632 முகாம்கள் நடத்தப்பட்டு, 9,86,732 பேர் பயனடைந்துள்ளனர். ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. புற்றுநோய், இருதய நோய், காசநோய் எனப் பலருக்கு தொடக்க நிலையிலேயே நோய்கள் கண்டறியப்படுகின்றன.
தொடக்க நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சை தருவதை திட்டத்தின் முக்கிய வெற்றியாக பார்க்கிறேன். முகாம்கள் மேலும் சிறப்பாக அமைந்திட, மக்கள் சொன்ன கருத்துகளை அதிகாரிகளுக்கு உத்தரவுகளாக வழங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

