Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடு: மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம், அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் 19ம் தேதி முதல் ஜனவரி 9 வரை நடைபெற உள்ளது. வரும் 30ம் தேதி மேற்படி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகை தர உள்ளதை முன்னிட்டு சிறப்பான முறையில் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், தலைமையில் இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

காவல் துறையின் சார்பில், பொதுமக்கள் திருக்கோயிலுக்குள் வரவும், வெளியே செல்லவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் செய்து தருதல். முக்கிய விருந்தினர் வருகையின் போது தேவையான பாதுகாப்பு அளிப்பது, பக்தர்களின் தேவைக்கு ஏற்றார் போல் பேருந்துகளை இயக்கவும், பேருந்துகள் நிற்குமிடத்தில் பொதுமக்கள் சிரமமின்றி ஏறவும், இறங்கவும் வரிசையை ஒழுங்குபடுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரும் 19ம் தேதி முதல் ஜனவரி 9 வரை அனைத்து நாட்களிலும் எந்நேரமும் குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், திருக்கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தில் சுகாதார ஏற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும்,

மேலும் அம்மாமண்டபம் படித்துறை, கொள்ளிடம் படித்துறையில் பொதுமக்கள் இரவு, பகல், எந்நேரமும் உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில் அதிகப்படியான மின்விளக்குகள் அமைக்கவும் மற்றும் திருநாட்களில் பாதுகாப்பாக குளிக்கும் வகையில் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும், பக்தர்கள் வசதிக்காக நடமாடும் கழிவறைகள் தற்காலிக சிறுநீர் கழிப்பிடங்கள், கழிவறைகள் அமைத்து தர வேண்டும், மேற்படி கழிவறைகள் அமைவிடம் குறித்த வழிகாட்டி பலகைகள் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைத்தல், தேவையான இடங்களில் தீயணைப்பு வண்டிகள் நிறுத்த ஏற்பாடு செய்தல், பொது மக்கள் அவசரத் தேவைக்கு இலவச மருத்துவ உதவி அளிக்க மருத்துவ குழுக்களை திருக்கோவில் வளாகத்தினுள் அமைத்துத் தருதல்.

ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவக்குழுக்கள் உரிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் தயார் நிலையில் இருந்திட வேண்டும். வரும் 29,30,31 ஆகிய தேதிகளில் முக்கிய திருநாட்களில் சிறப்பு ரயில் வண்டிகள் இயக்கவும், அனைத்து விரைவு இரயில் வண்டிகளும் சென்ற ஆண்டுகள் போல் இந்த ஆண்டும் ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்தில் இயக்கவும் இரயில்வே துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவிழாக்காலம் முழுவதும் வரும் 19ம் தேதி முதல் ஜன.9 வரை முடிய தடையின்றி மின்சாரத்தை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும், பழுது ஏற்பட்டால் உடனே நிவர்த்தி செய்ய தேவையான பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருத்தல். முக்கிய திருநாட்களில் அதிகப்படியான சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல். சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்.

சாலைகளை மேடு பள்ளம் இல்லாமல் செப்பனிட்டு சீராக பராமரித்தல், வாய்க்கால்கள் மற்றும் கழிவு நீர் தொட்டிகள் மூடியிருப்பதை உறுதி செய்தல், அன்னதானம் வழங்குபவர்கள் முறையாக உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தரமான உணவு வகைகள் வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும், திருக்கோயில் வளாகத்திற்குள் பக்தர்களுக்கு க்யூலைன் வரிசைகள் செய்தல். திருக்கோயிலின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பராமரித்தல், ஜெனரேட்டர் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும் எனவும் அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் காமினி. மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி. திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சிபின், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் செ.சிவராம் குமார், சு.ஞானசேகரன் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.