ஓசூர்: ஓசூரில் ஸ்ரீராம்சேனா நிர்வாகி கொலை வழக்கில், வாலிபர்கள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட் தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே சொப்பட்டியைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவரது மகன் மோகன்பாபு (25). இன்ஜினியரிங் படித்த இவர், தனியார் நிறுவன ஊழியராக இருந்து வந்தார். மேலும், ஸ்ரீராம்சேனா (தமிழ்நாடு) என்ற அமைப்பின் ஓசூர் நகர செயலாளராக இருந்தார். கடந்த 2021ல் மோகன்பாபுவின் டூவீலரும், திலக் என்பவரின் தந்தை முருகேசனின் வாகனமும் மோதியது. இதனால் அவர்களுக்குள் பிரச்னை இருந்து வந்தது. கடந்த 1.1.2022 அன்று மோகன்பாபுவை, திலக் (23) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி, சொப்பட்டி திலக் (23), பவன் (25), மூர்த்தி (24), சுரேஷ் (24), அப்பு (22), ஹேமந்த் குமார் (22) ஆகிய 6 பேரை கைது செய்தனர். ஜாமீனில் வந்த திலக்கை பழிக்கு பழியாக கூலிப்படையினர் கடந்த 2023 மே 12ம் தேதி ஓசூரில் வெட்டிக் கொலை செய்தனர். மோகன்பாபு கொலை வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சந்தோஷ் விசாரித்து பவன், மூர்த்தி, சுரேஷ், அப்பு, ஹேமந்த் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


