இலங்கை அதிபர் திசநாயக்கவுடன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு: இந்தியா உதவியுடன் நடந்து வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை
கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக்கவை சந்தித்துப் பேசினார். இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றார். கொழும்பு சென்ற விக்ரம் மிஸ்ரி அந்நாட்டின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்துப்பேசினார். அப்போது பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து அவர் விவாதித்தார்.
அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் விஜயதா ஹேரத்மற்றும் வெளியுறவு செயலாளர் அருணி ரணராஜாவையும் மிஸ்ரி சந்தித்து, இலங்கையில் இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய இருதரப்பு திட்டங்களின் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து கொழும்புவில் அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக்கவை சந்தித்தார்.
இருதரப்பு உறவை வலுப்படுத்துவது மற்றும் முக்கிய இருதரப்பு திட்டங்களின் ஆய்வு உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பை தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கயை இடையே 350மில்லியன் டாலர் மதிப்பிலான அடிப்படையிலான கடன் வசதி ஒப்பந்தங்களை இருதரப்பினரும் பரிமாறிக்கொண்டனர். இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டாலர் மறுசீரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தங்கள் அமைந்தன.


