Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

கடந்த இரண்டே நாட்களுக்குள் மீனவர்கள் கைது செய்யப்படும் இரண்டாவது சம்பவம் இது. பருவகால மீன்பிடித் தடைக்குப் பிறகு சமீபத்தில் தான் மீன்பிடித் தொழிலை மீனவர்கள் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே 48 இந்திய மீனவர்கள் இலங்கைக் காவலில் உள்ள நிலையில், இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள் மீனவ சமூகத்தினரிடையே கடுமையான துயரத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.