ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை விரட்டியடித்ததால் குறைவான மீன்பாடுடன் கரை திரும்பினர். இதனால் மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 313-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
மதியம் 100க்கும் மேற்பட்ட படகுகள் கடல் எல்லையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கச்சத்தீவு கடல் பகுதியில் இருந்து சிறிய ரக ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் திடீரென மீன்பிடி படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களை அச்சுறுத்தினர். எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களை தொடர்ந்து மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர்.
இதனால், அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக நடுக்கடலில் மீன்பிடி வலைகளை வெட்டி வீசிவிட்டு இலங்கை கடற்படை பிடியில் சிக்காமல் தப்பி வந்தனர். பின்னர், தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்தனர். மீனவர்களில் ஒரு பகுதியினர் கைது நடவடிக்கைக்கு அஞ்சி இரவே கரை திரும்பினர். மற்றவர்கள் இன்று காலை சுமாரான மீன்பாடுடன் கரை திரும்பினர். இதனால் தங்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறைபிடித்துவரும் நிலையில் தற்போது நடுக்கடலில் விரட்டியத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
