கொழும்பு: இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்தது. சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக சரண்ஷ் ஜெயின் அறிமுக வீரராக இடம் பெற்றார்.
இலங்கை அணியில் கமில் மிஷரா (அறிமுகம்), பசிந்து சூரியபண்டாராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜெய்ஸ்வால், ராகுல் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். ராகுல் 18 ரன்னில் வெளியேற, அடுத்து ஜெய்ஸ்வால் உடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். அவர் ரன் எடுக்காத நிலையிலும், 1 ரன் எடுத்திருந்தபோதும் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை இலங்கை வீரர்கள் கோட்டைவிட்டனர். அதிர்ஷ்டக் காற்று தன் பக்கம் பலமாக வீசுவதை உணர்ந்துகொண்ட படிக்கல், அதன் பிறகு பொறுப்புடன் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தார்.
ஜெய்ஸ்வால் 45 ரன்னில் (53 பந்து, 9 பவுண்டரி) வெளியேற, படிக்கல் கேப்டன் கில் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 120 ரன் சேர்த்தது. கில் 50 ரன் (108 பந்து, 6 பவுண்டரி) எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ரிஷப் பன்ட் 3 ரன் எடுத்த நிலையில், பந்து மணிக்கட்டு பகுதியில் பலமாகத் தாக்கியதால் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து, படிக்கல் ஜடேஜா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தது.
காலேவில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 167 ரன் விளாசி இருந்த படிக்கல், நேற்று 117 ரன் எடுத்து (193 பந்து, 12 பவுண்டரி) நுவந்தா சுழலில் கிளீன் போல்டானார். ஜடேஜா 43 ரன் எடுத்து (83 பந்து, 4 பவுண்டரி) அவுட்டாக, இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்துள்ளது (85 ஓவர்). துருவ் ஜுரெல் 7, சரண்ஷ் ஜெயின் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை பந்துவீச்சில் அசிதா பெர்னாண்டோ 3, லாகிரு குமாரா, கேஷரா நுவந்தா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.



