Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இலங்கையுடன் முதல் டெஸ்ட் போட்டி 233 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அபார வெற்றி: 11 விக். வீழ்த்திய ஜேன்சன் ஆட்ட நாயகன்

டர்பன்: தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நேற்று நடந்த முதல் டெஸ்டின் 4ம் நாளான நேற்று, இமாலய வெற்றி இலக்குடன் 2ம் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால், 233 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி பிரம்மாண்டமாக வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. டர்பனில் துவங்கிய முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா 191 ரன் எடுத்தது.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி வீரர்கள் தென் ஆப்ரிக்க வீரர்களின் ஆக்ரோஷமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீட்டுக் கட்டு போல் சரிந்தனர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 42 ரன் மட்டுமே எடுத்து பரிதாபமாக காட்சி அளித்தது.  பின் இரண்டாம் இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா, 5 விக்கெட் இழப்புக்கு 366 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால், 516 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை வீரர்கள் 2ம் இன்னிங்சை துவக்கினர். 3ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன் மட்டுமே எடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை இலங்கை வீரர்கள் தினேஷ் சண்டிமல் 29 ரன்னுடனும், தனஞ்செயா டி சில்வா 0 ரன்னுடனும் நேற்று தொடர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை உயர்த்தினர். இருப்பினும், அணியின் ஸ்கோர் 196 ஆக இருந்தபோது, 59 ரன்னில் டிசில்வா அவுட்டானார். பின் நிலைத்து ஆடிக்கொண்டிருந்த தினேஷ் சண்டிமல் 83 ரன்னில் கோட்ஸி பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் தந்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்த ஒரு ரன்னில் விஷ்வ பெர்னாண்டோவும், அடுத்த 4 ரன்னில் குஷால் மெண்டிசும் வீழ்ந்து அதிர்ச்சி அளித்தனர். கடைசி விக்கெட்டாக அஸிதா பெர்னாண்டோ, ஜேன்சன் பந்து வீச்சில் ரன் எடுக்காமல் அவுட்டானார். அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 282. இதையடுத்து, 233 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி பிரம்மாண்ட வெற்றி பெற்று அசத்தி உள்ளது. தென் ஆப்ரிக்கா பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் அற்புதமாக பந்து வீசி 73 ரன் கொடுத்து, 4 விக்கெட் வீழ்த்தினார்.

ஜெரால்ட் கோட்ஸீ, கேஷவ் மகராஜ், காகிஸோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி முன்னிலை வகிக்கிறது. போட்டியின் ஆட்ட நாயகனாக, 2 இன்னிங்சிலும் சேர்த்து, 11 விக்கெட் வீழ்த்திய ஜேன்சன் அறிவிக்கப்பட்டார். 2வது மற்றும் கடைசி போட்டி, கெபெர்ஹா நகரில் செயின்ட் ஜார்ஜ் பார்க் ஸ்டேடியத்தில் வரும் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்கிறது.