Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலுவான தூதரக முயற்சி: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: “இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.சிவசங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் கவலை அளிக்கக் கூடிய வகையில் அதிகரித்துள்ளது.

கடந்த 22ம் தேதி (நேற்று முன்தினம்) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் 23ம் தேதி (நேற்று) கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று தான் பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும், இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் இன்னும் அதிக அளவில் தொடர்கிறது. இந்த ஆண்டில் மட்டும், 8 வெவ்வேறு சம்பவங்களில் 119 மீனவர்களும், 16 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். நமது மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இக்கூட்டத்தைக் கூட்டி நிரந்தர தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானதாகும். எனவே நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விரைவில் விடுவிக்கவும் வலுவான தூதரக முயற்சிகளை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.