Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மனைவி டைரியை கணவர் பார்க்கக் கூடாது திருமண உறவில் ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: ‘தனது குறிப்பேட்டை (டைரியை) கணவர் பார்க்கக் கூடாது என மனைவி நினைப்பது சரியே. திருமண உறவில் ஒருவரையொருவர் நம்ப வேண்டும்’ என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 2003ல் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். என்னிடம் இருந்து விவாகரத்து கோரி, கணவர் பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் எனது செல்போனில் இருந்து நான் யாரிடமெல்லாம் பேசினேன் என்பதை ஒரு ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதை ஒரு ஆவணமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று எனது தரப்பு மனுவை ஏற்க மறுத்த பரமக்குடி நீதிமன்றம், என் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ஒருவரது செல்போன் பேச்சு தொடர்பான ஆவணங்களை பெற சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அப்போது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஓடிபி வரும். இதை சரியாக செயல்படுத்தினால் தான் சம்பந்தப்பட்ட விபரங்களை பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால், இந்த வழக்கில் மனைவிக்குத் தெரியாமல் அவரது செல்போனை பயன்படுத்தி, அதன் மூலம் ஓடிபி எண் பெற்று சம்பந்தப்பட்ட ஆவணங்களை பதிவிறக்கம் செய்துள்ளார். இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. திருமண உறவில் ஒருவரையொருவர் நம்ப வேண்டும். ஒருவரது தனி உரிமையில் மற்றவர் தலையிடுவது முறையாக இருக்காது.

தனது குறிப்பேட்டை (டைரியை) கணவர் பார்க்கக் கூடாது என மனைவி நினைப்பது சரியே. இது செல்போனுக்கும் பொருந்தும்.ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இந்த வழக்கில் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

பாரதிய சாட்சிய ஆதினிய சட்டப்படியும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் மின்னணு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது அதற்குரிய வல்லுநர் சான்றளிக்க வேண்டும். இந்தச் சட்டம், கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. ஆனால், தமிழ்நாட்டில், இதற்குரிய வல்லுநர்கள் எந்த மாவட்டத்திலும் நியமிக்கப்படவில்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க கூடிய வல்லுநர்களை 3 மாதங்களில் நியமிக்க ஒன்றிய தொழில்நுட்ப அமைச்சகச் செயலர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.