தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும்: பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்
சென்னை: தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானங்களும், விளையாட்டு விடுதிகளும் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் நாங்குனேரி நாராயணன் (தவெக), பரமத்திவேலூர் சேகர் (அதிமுக), புதுக்கோட்டை முத்துராஜா (திமுக) உள்ளிட்ட 23 உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அளித்த பதில் வருமாறு:
விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க ஊரக வளர்ச்சி துறை மூலம் கட்டிடங்கள் கட்டப்படும். தமிழ் நாட்டில் 500 விளையாட்டு மைதானங்கள் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் மேம்படுத்தப்படும். பள்ளிகளில் முறையான விளையாட்டு மைதானங்கள் இல்லை. இதுகுறித்து பள்ளி கல்வி துறை அமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். கபடி கலாச்சார விளையாட்டு போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. அனைத்து மைதானங்களிலும் உரிய கட்டமைப்பு இல்லை. அடுத்த 5 ஆண்டுக்கு என்றில்லாமல் 30 ஆண்டுகளானாலும் மைதானங்களை பயன்படுத்தும் வகையில் மைதானங்கள் மேம்படுத்தப்படும்.
கடந்த ஆட்சியில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க தலா ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டது. அந்த ஒதுக்கீடு போதாது குறைந்தது ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்தால்தான் மேம்படுத்தப்பட்ட டிராக், நீச்சல், ஜிம் உள்ளிட்ட அனைத்து போட்டிகளுக்குமான மைதானம் அமைக்கப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். விளையாடிக்கொண்டிருக்கும்போது மாணவன் முகேஷ் இறந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பகல் 11 மணியிலிருந்து 3.30 வரை நடத்த கூடாது என்று சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.



