Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

14 விளையாட்டுத்துறை கட்டடங்களை திறந்து வைத்து, 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.3.2026) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 42 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 14 விளையாட்டுத் துறை கட்டடங்களை திறந்து வைத்து, 37 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்;

செங்கல்பட்டில் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு வளாகம், நீலகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 3 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமிகள், நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், சேலம் மாவட்டம் – ஆத்தூர் மற்றும் மேட்டூர், செங்கல்பட்டு மாவட்டம் – தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள்;

தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் தலா 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாரா விளையாட்டு அரங்கங்கள், சென்னை, முகப்பேரில் 2 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட விளையாட்டு வளாகம், கோயம்புத்தூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 4 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பார்வையாளர் மாடம்;

சென்னை, இராணி மேரி கல்லூரி வளாகத்தில் 20 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கபடி ஆடுகளம், நாமக்கல் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கபடி ஆடுகளம் மற்றும் 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம்; என மொத்தம் 42 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 14 விளையாட்டுத் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்;

கடலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 14 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதை, சென்னை, வேளச்சேரி AGB வளாகத்தில் 16 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் மற்றும் டைவிங் குளம் புதுப்பிக்கும் மற்றும் மேம்படுத்தும் பணி, சென்னையில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பாய்மரப் படகுப் பயிற்சி அகாடமி மற்றும் பாய்மரப் படகுப் போட்டிக்கான சிறப்பு மையம்; என மொத்தம் 37 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.