செங்கல்பட்டு: செங்கல்பட்டு அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட நகராட்சியின் கீழ் செயல்படும் அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைபள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொன்விளைந்த களத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செங்கல்பட்டு செயின்ட் ஜோசப், தூய கொலம்பா, செயின்ட் மேரிஸ் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்பட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் துவங்கி நடந்து வருகின்றன.
இதில், பள்ளி தலைமை ஆசிரியர் மாயவன் தலையில் நடைபெற்ற இப்போட்டியினை செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். வாலிபால் போட்டியில், 8 குழுக்களாக 96 மாணவர்கள் பங்கேற்றனர். இன்றையதினம் இதே பள்ளிகளை சேர்ந்த வேறு மாணவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க உள்ளனர்.அதனை தொடர்ந்து பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி, ஓவியம் மற்றும் கவிதை என பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
இறுதியாக இப்பள்ளியின் நூற்றாண்டு விழா மேடையில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பழைய மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கேடயங்கள் வழங்க உள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
