Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விறுவிறு பிரசாரம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக இவிஎம் இயந்திரங்களை சரிபார்த்து வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் பறக்கும் படையினரும் ஆங்காங்கே வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக கூட்டணி, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கொளத்தூரில் வேட்பு மனு தாக்கல் செய்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், திருவாரூர், திருச்சி, கரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் அனல் பறக்க பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இம்முறை திமுக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. இக்கூட்டணியில் காங்கிரஸ் - 28, தேமுதிக - 10, விடுதலை சிறுத்தைகள் - 8, இந்திய கம்யூனிஸ்ட் - 5, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5, மதிமுக - 4 உட்பட கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், அக்கட்சிகளின் முக்கிய தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணியில் பாஜ - 27, பாமக - 18, அமமுக - 11, தமாகா- 5 உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தேசிய தலைமையுடன் தீவிர பேச்சு வார்த்தைக்கு பின் பாஜ, காங். கட்சிகள் நேற்று தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனால் தமிழகத்தில் அக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பரபரப்படைந்துள்ளன.

பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே கூறியபடி, நெல்லை தொகுதியில் இருந்து மாறி சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். அண்ணாமலைக்கு சீட் வழங்காததால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது தேர்தலில் எதிரொலிக்கும் என்ற பேச்சும் பரவலாக உள்ளது. திமுகவை பொறுத்தவரை தேர்தல் அறிக்கை முக்கிய ஹீரோவாக திகழும். இம்முறை ஹீரோயின்களுக்கான தேர்தல் அறிக்கையாகவும் உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இல்லத்தரசிகளுக்கான ரூ.8 ஆயிரம் கூப்பன் மிகுந்த வரவேற்ைப பெற்றுள்ளது. மேலும், மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம் உட்பட கல்வி உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள சிறப்பான திட்டங்களும் தொடர உள்ளதால், திராவிட மாடல் அரசு 2.0 கண்டிப்பாக மலரும்.

200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி அபார வெற்றி பெறுமென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது. தமிழகம் முழுவதும் வெப்பநிலை 2 - 4 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தாலும், தமிழகத்தில் தேர்தல் பிரசாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் தொடர்பான பணிகளும் வேகமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.