வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை முதல் 3 நாட்களுக்கு 1,805 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!!
சென்னை கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாளை முதல் 3 நாட்களுக்கு 1,805 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வார இறுதி நாட்களை முன்னிட்டுத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை முன்னிட்டு, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும் 430 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும் 465 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.
அதேபோல ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு ஏதுவாகவும் 410 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த வாரம் மட்டும் வெள்ளிக்கிழமை பயணிகள் ஊருக்குச் செல்வதற்காக கிட்டத்தட்ட 8,570 பயணிகள் முன்பதிவு செய்திருக்கிறார்கள். இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.


