Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகும் வரை உண்ணாவிரதம்: 5ம் தேதி முதல் தொடங்குகிறார்

தாக்குர்நகர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தில் வங்கதேச எல்லையோர மாவட்டங்களான வடக்கு 24 பர்கானாக்கள், தெற்கு 24 பர்கானாக்கள், நதியா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மத்துவா சமூகத்தினர் சுமார் 40 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களான இச்சமூகத்தினர், சமீப ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்தனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியலுக்கான சிறப்புத் திருத்தப் பணி நாளை மறுநாள் முதல் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திருத்தப் பணியின்போது, போங்கான் பகுதியில் மட்டும் தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில் சுமார் 55 சதவீதத்தினரின் பெயர்கள், கடந்த 2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆதார வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், அவர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்ற அச்சம் மத்துவா சமூகத்தினரிடையே எழுந்துள்ளது. இந்த சூழலில், அகில இந்திய மத்துவா மகாசங்கத்தின் தலைவரும், திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான மமதாபாலா தாக்கூர், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியை உடனடியாக ரத்து செய்யக் கோரி வரும் 5ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.

தாக்குர்நகரில் நடைபெற்ற சங்கத்தின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்த சிறப்பு திருத்தப் பணி, எங்களின் வாக்குரிமையைப் பறிப்பதோடு, இந்தியக் குடிமக்கள் என்ற எங்களின் அடையாளத்தின் மீதே சந்தேகத்தை எழுப்பி, எங்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை, பாஜக தலைமையிலான அரசு ஒரு திட்டமிட்ட சதி மூலம் பறிக்கிறது. இதைக் கண்டித்தும், சிறப்பு திருத்தப் பணியை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளோம்’ என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

வீதியில் இறங்கி போராடும் மம்தா பானர்ஜி

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் நாளை மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தாவின் ரெட் ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து தொடங்கும் கண்டனப் பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணி சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோராசங்கோவில் உள்ள ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லத்தில் நிறைவடைகிறது.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், ‘எங்கள் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, இந்த சிறப்புத் திருத்தப் பணி முடியும் வரை வீதிகளில் இருந்து போராடுவேன் என்று ஏற்கனவே கூறியுள்ளார். உண்மையான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பாஜகவின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்துவதே இந்த பேரணியின் நோக்கம்’ என்றார். மேலும், மக்களுக்கு உதவுவதற்காக மாநிலம் முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட உதவி முகாம்கள் மற்றும் பிரத்யேக அறைகளை திரிணாமுல் காங்கிரஸ் அமைத்துள்ளது. இதுமட்டுமின்றி, 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் நகல்களை வீடு வீடாக விநியோகித்து, அதை அதிகாரிகளிடம் ஆதாரமாகக் காண்பிக்குமாறு கட்சி நிர்வாகிகள் மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.