தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்கிறது வங்கக் கடலில் உருவானது ‘முரசு’ புயல்: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், முரசு புயலாக மாறியுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 5 மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கியது.
அந்த சமயத்தில் வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது வலுப்பெறாமலேயே கரைந்து போனது. அதன் பிறகு வங்கக்கடலில் அந்தமான் தீவுக்கருகே புயல் சின்னம் உருவானது. அதேநேரத்தில் அரபிக்கடலிலும் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது வங்கக்கடலை நோக்கி நகர்ந்தது. இதனால் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சிமலையில் பலத்த மழை பெய்தது.
இதனால் ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. நீலகிரி மலையில் மட்டும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பஸ் மீது மண் சரிந்ததில் ஓட்டுநரும் பலியானார். தொடர்ந்து கடந்த 25ம் தேதி அர்னாப் புயல் உருவானது. இந்த புயல் ஆந்திராவையொட்டிய பகுதிகளில் கரையை கடந்து சூறாவளி காற்று, மழையை கொடுத்தது. இந்த புயலால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதை தொடர்ந்து தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் தற்போது 2வது புயல் உருவாகியுள்ளது. இந்த புதிய புயலுக்கு முரசு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் இது மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலையில் 5.30 மணிஅளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியிலும் நிலவியது. தொடர்ந்து இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் நேற்று புயலாக (முரசு) நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே இன்று நள்ளிரவு, நாளை அதிகாலை வேளையில் கரையை கடக்கக்கூடும்.
சுமார் 1.5 கிமீ உயரத்தில் கேரளா-கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து தெற்கு மகாராஷ்டிரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் இன்று சென்னை மற்றும் திருவள்ளூர், மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 4ம் தேதி மற்றும் 5ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6ம் தேதி மற்றும் 7ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன, மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை,
விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் மணிக்கு 55-65 கி.மீ வேகத்தில் (அவ்வப்போது 75 கி.மீ வேகம் வரை) பலத்த காற்று வீசக்கூடும். இதர வட கடலோர தமிழ்நாட்டு மாவட்டங்களில், சில இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் (அவ்வப்போது 60 கி.மீ வேகம் வரை) பலத்த காற்று வீசக்கூடும். நாளை வட கடலோர தமிழ்நாட்டு மாவட்டங்களில், சில இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் (அவ்வப்போது 60 கி.மீ வேகம் வரை) பலத்த காற்று வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* புதிய புயலுக்கு முரசு என்று பெயர் வைத்தது யார்?
வட இந்திய பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்க 13 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு உள்ளது. இதில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் சுழற்சி முறையில் பெயர்களை தேர்வு செய்கின்றன. அந்த வகையில், இந்த புதிய புயலுக்கு முரசு என்ற பெயரை வழங்கிய நாடு இந்தியா.
தமிழ் மொழியில் ‘முரசு’ என்பது முழக்கமிடும் ஒரு பாரம்பரிய இசைக்கருவி அல்லது முக்கிய தகவல்களை ஊருக்கு அறிவிக்கப் பயன்படும் கருவியாகும். இந்திய பெருங்கடல் பகுதியில் தமிழ்ப் பெயரில் ஒரு புயல் உருவாவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொடர்ந்து வரும் புயல்களுக்கு அக்வன் (ஈரான்), கானி (மாலத்தீவு) என்று பெயரிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


