ஐசிசியின் சிறந்த வீராங்கனையாக தென் ஆப்பிரிக்க கேப்டன் தேர்வு
சேலம்,: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைகளின் பரிந்துரை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ் கார்ட்னர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதில், தென் ஆப்பிரிக்க அணியை முதன் முறையாக ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்ற லாரா வோல்வார்ட், ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் 9 போட்டிகளில் விளையாடிய லாரா வோல்வார்ட், 571 ரன்களை குவித்து ரன் வேட்டையில் முதலிடம் பிடித்தார். சிறந்த தலைமைத்துவம் மற்றும் பேட்டிங்கில் சிறந்த விளங்கியதற்காக இவர், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த ஐசிசி மகளிர் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தான் ஐசிசி சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டது குறித்து, லாரா வோல்வார்ட் கூறுகையில், ‘‘பெண்கள் கிரிக்கெட்டுக்கான வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை அமைந்தது. ஒட்டுமொத்த அணியின் செயல்திறனுக்குப் பிறகு, இந்த விருதை வெல்வது மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்றார்.