தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல்: நானும், ரோகித்தும் அணி வெற்றிக்கு உதவுவதை நினைத்து மகிழ்ச்சி: தொடர் நாயகன் விராட் கோஹ்லி நெகிழ்ச்சி
விசாகப்பட்டினம்: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்னுக்கு ஆல்அவுட்ஆனது. டிகாக் அதிகபட்சமாக 106 ரன் எடுத்தார். இந்திய பவுலிங்கில் குல்தீப், பிரசித் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ரோகித்சர்மா 75 ரன்னில் அவுட் ஆக ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டியில் முதல் சதம் அடித்தார். நாட்அவுட்டாக அவர் 116, விராட் கோஹ்லி அதிரடியாக 45 பந்தில், 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 65 ரன் விளாசினர். 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 271 ரன் அடித்த இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என தொடரை கைப்பற்றியது.
ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதும், கோஹ்லி தொடர் நாயகன் விருதும் (302 ரன்) பெற்றனர். வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், ``நான் டாஸ் வென்ற பின் வீரர்கள் என்னை மிகவும் பெருமையாக பார்த்தனர். இதற்கு முன் யாரும் இப்படி பார்த்தது கிடையாது. 2வது போட்டியில் கடுமையான சூழலில் ஆடி தோல்வியை தழுவினோம். இன்று ஆடுகளம் நன்றாக இருந்தது. பவுலர்கள் கொத்தாக விக்கெட்களை எடுத்தனர். பிரசித் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி காக் சிறப்பாக ஆடினார். அவரின் விக்கெட் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது’’ என்றார்.
தொடர் நாயகன் விராட் கோஹ்லி கூறுகையில், ``நான் இந்த தொடரில் ஆடிய விதம் தனிப்பட்ட முறையில் திருப்திகரமாக இருக்கிறது. சுதந்திரமாக எந்த ஒரு நெருக்கடியும் இன்றி ஆடினேன். நான் 16 ஆண்டு காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறேன். இந்த பயணத்தில் நான் நிறைய விஷயங்களை கற்று ஒரு நல்ல பேட்டராக, மனிதனாக மாறி இருக்கிறேன். அணிக்காக வெற்றியில் பங்களிக்க முடிகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். ராஞ்சியில் நடந்த முதல் போட்டிதான், இந்த தொடரில் எனது பெஸ்ட் என்று கூறுவேன். அன்று நான் உணர்ந்த எனர்ஜி மூலம் ரிஸ்க் எடுத்து ஷாட்களை விளையாடினேன். தொடர்ந்து விளையாட ஆசைப்படுகிறேன். நானும், ரோகித் சர்மாவும் அணியின் வெற்றிக்கு இன்னும் உதவுவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன்’’ என்றார்.
அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டி கட்டாக்கில் நாளை மறுநாள் நடக்கிறது.
அர்ஷ்தீப் சிங்கை கலாய்த்த கோஹ்லி;
அர்ஷ்தீப் சிங் போட்டி முடிந்த பின்னர் கோஹ்லியுடன் எடுத்த செல்பி வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதில் அர்ஷ்தீப் கோஹ்லியிடம், ``பாஜி (சகோதரரே), டார்கெட் ரன் கம்மியா போச்சு.. இல்லனா இன்னைக்கு உங்களுக்கு ஹாட்ரிக் செஞ்சுரி கன்ஃபார்ம்’’ என்று கூறினார். இதைக் கேட்ட கோஹ்லி சற்றும் தாமதிக்காமல், ``நல்லவேளை நாம டாஸ் ஜெயிச்சோம்.. இல்லனா இரவு நேர பனியில் பவுலிங் போடும்போது, உனக்கும் இன்னைக்கு செஞ்சுரி கன்ஃபார்ம்’’ என்று சொல்லிச் சிரித்தார்.
புத்திசாலித்தனமாக ஆடி இருக்கவேண்டும்;
தென்ஆப்ரிக்க கேப்டன் பவுமா கூறியதாவது: இந்த போட்டியை சுவாரஸ்யமாக மாற்ற நினைத்தோம். ஆனால் அதற்கான ரன்களை எடுக்கவில்லை. விக்கெட்டுகளை தக்க வைத்துக் கொண்டு பெரிய ஸ்கோர் அடித்திருக்க வேண்டும். பவுலிங்கில் முதல் 10 ஓவர் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினோம். ஆனால் இந்தப் போட்டியில் பெரிய இலக்கை நிர்ணயிக்கவில்லை. இதனால் எந்த நெருக்கடியும் இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். ஆடுகளம் முதல் 2 போட்டிகளை விட வித்தியாசமாக இருந்தது. கொஞ்சம் புத்திசாலித்தனமாக விளையாடி இருக்க வேண்டும் என்றார்.
பிட்ஸ்... பிட்ஸ்... பிட்ஸ்...
* சர்வதேச கிரிக்கெட்டில் கோஹ்லி 20வது முறையாக தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார். சச்சின் 19 முறை இந்த விருதை பெற்றிருக்கிறார்.
* ஒன்டேவில் சேசிங்கில் கோஹ்லி 91வது முறையாக 50 பிளஸ் ரன் அடித்துள்ளார். பாண்டிங் 94, சச்சின் 92 என முதல் 2 இடத்தில் உள்ளனர்.
* டெஸ்ட், ஒன்டே, டி.20 என 3 வித போட்டியிலும் சதம் விளாசிய 3வது இந்திய வீரர் என்ற சிறப்பை ஜெய்ஸ்வால் பெற்றார்.
* தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக தொடர்ச்சியாக 3வது நாள் தொடரை இந்தியா முதன்முறையாக வென்றுள்ளது.
* 3 போட்டியில் 12 சிக்சர் அடித்த கோஹ்லி, ஒருநாள் தொடர் ஒன்றில் அதிக சிக்சர்கள் இதுதான்.
*சொந்த நாட்டில் ஒருநாள் போட்டிகளில் 5ஆயிரம்ரன் அடித்த 5வது வீரர் ரோகித். இதற்கு முன் சச்சின், கோஹ்லி, பாண்டிங், காலிஸ், சொந்த நாட்டில் 5ஆயிரம் ரன்னுக்கு மேல் அடித்துள்ளனர்.