Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மக்கள் குரலாக ஒலிக்கிறது

கள்ளக்குறிச்சியின் கருணாபுரத்தில் நிகழ்ந்த விஷசாராய சாவுகளை வைத்ேத, கடந்த சில நாட்களாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அரசியல் நகர்வுகள் தொடர்கிறது. அதே நேரத்தில் அரசும், முதல்வரும் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால், இதற்குரிய தீர்வுகளை கையாண்டு வருவது, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த 19ம்தேதி இந்த சம்பவம் நடந்தது. உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டார்.

சம்பவம் குறித்து 20ம்தேதி, சட்டமன்றத்தில் முழுஅறிக்கை தாக்கல் செய்தார். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கான உண்மை காரணத்தை அறிய, ஓய்வு பெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைத்தார். சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டார். அமைச்சர்கள், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார். குற்றவாளிகளில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளச்சாராயம், விஷச்சாராயம் போன்றவற்றை ஒழிப்பதற்கும், குற்றவாளிகள் கைது நடவடிக்கை தீவிரமாக தொடர்கிறது. பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும், 24மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், மதுவிலக்கு சட்டதிருத்த மசோதா, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு, ஆயுள்வரை கடுங்காவல் மற்றும் ரூ.10லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ன்படி விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி செய்வதற்கு தண்டனை வழங்கப்படுகிறது. கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

மது அருந்த பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீல் வைக்கப்படும். தண்டனை வழங்கப்பட்ட ஒருவரை, அந்த பகுதியில் இருந்தே நீக்கம் செய்ய மதுவிலக்கு, புலனாய்வு அதிகாரியால் விண்ணப்பம் செய்ய சட்டதிருத்தம் கொண்டு வரப்படும். தண்டனைகளையும், அபராத தொகைகளையும் அதிகரித்து அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, மனித உயிர்கள் இறந்து போனால் 2 பேரா? 20 பேரா? என்று பார்ப்பதில்லை.

ஒரே ஒருவர் இறந்தாலும், அது மாபெரும் இழப்பு தான். இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து, ஒருவர் கூட தப்பமுடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். விஷச்சாராய விற்பனை என்பது ஒரு சமூக குற்றம். விலை மதிப்பில்லாத மனித உயிர்களை பலிவாங்குகிறது. இதனை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம். அதே போல் போதை பொருள், கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்கும் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் என்று முதல்வர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இப்படி மது, போதை பழக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, அரசு ஒரு பக்கம் எடுத்தாலும், இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் அதிகம் முன்னெடுக்கப்பட வேண்டும். போதை மருந்தின் பாதிப்புகளை உணர்த்துதல், குடிநோயாளிகளை மீட்பது போன்றவற்றை, அரசு ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. அந்த இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கட்சி பாகுபடின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். இதை அனைத்து கட்சிகளும் ஏற்று களப்பணியாற்ற வேண்டும் என்பதே தற்போது மக்களின் குரலாக ஒலிக்கிறது.