Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒலியை விட வேகமாக பறக்கும் சூப்பர்சோனிக் விமானங்கள் இயக்க அமெரிக்கா திட்டம்: 53 ஆண்டு தடையை நீக்குகிறது

வாஷிங்டன்: ஒலியை விட வேகமாக பறக்கக் கூடிய சூப்பர்சோனிக் விமானங்களை இயக்குவதற்காக 53 ஆண்டுகால தடையை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. சூப்பர்சோனிக் விமானங்கள் ஒலியின் மாக்-1 (மணிக்கு 1234 கிமீ) வேக்தை விட வேகமாக பறக்கக் கூடியவை. ஆனால், இத்தகைய விமானங்களை தரையிறக்கும் போதும், புறப்படும் போதும் ஏற்படும் இரைச்சல் பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

இதன் ஒலி அதிர்வுகளால் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடையக்கூடும். கட்டிடங்களுக்கு சேதம் விளைவிக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளன. இதனால், அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்ஏஏ) சூப்பர்சோனிக் விமானங்களுக்கு கடந்த 1973ல் தடை விதித்தது. தற்போது பல தொழில்நுட்பங்கள் முன்னேறிய நிலையில், சமீபத்தில் ஒலியை விட வேகமாக பறக்கக் கூடிய எக்ஸ்-59 விமானத்தை நாசா வெற்றிகரமாக சோதனை செய்தது.

இந்த விமானம் அதிக ஒலி அதிர்வுகளை உருவாக்காமல் வேகமாக பறக்கக் கூடியது என்பது சிறப்பு. இதைத் தொடர்ந்து, சூப்பர்சோனிக் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட 53 ஆண்டு கால தடையை தளர்த்தி, அதற்கு பதிலாக இரைச்சல் வரம்பை கொண்டு வர எப்ஏஏ முடிவு செய்துள்ளது.

இதே போல சூப்பர்சோனிக் விமானங்கள் தரையிறங்குதல், புறப்படுதல் ஆகியவற்றுக்கும் மற்றொரு விதியை ஆண்டின் பிற்பகுதியில் கொண்டு வர எப்ஏஏ திட்டமிட்டுள்ளது. இந்த 2 விதிகளும் 2027ம் ஆண்டு நடுப்பகுதியில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள பெரும்பாலான பயணிகள் விமானங்கள் மணிக்கு சுமார் 900 கிமீ (மாக் 0.85) வேகத்தில் பறக்கக் கூடியவை.