Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சவுகார்பேட்டை நகை பட்டறையில் தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் சாவு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தண்டையார்பேட்டை: சென்னை சவுகார்பேட்டையில் நகை பட்டறையில் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் பட்டறை உரிமையாளர் பலியான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 ஊழியர்கள் அடுத்தடுத்து இறந்துள்ளனர். சென்னை சவுகார்பேட்டை சிங்கண்ணன் தெருவில் 4 மாடி கட்டிடத்தில் நகைபட்டறை செயல்பட்டு வந்தது. இந்த பட்டறையை மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சுமன்பால் பி சோகித் (35) என்பவர் நடத்தி வந்தார். இவர், மனைவி, குழந்தையுடன் வியாசர்பாடியில் வசித்து வந்தார். இவரது பட்டறையில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர் வேலை பார்த்து வந்தனர். இங்கு, பழைய மற்றும் புதிய தங்கத்தை உருக்கி புதுநகைகள் தயாரித்து சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு சப்ளை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி இரவு 7 மணியளவில் 4வது மாடியில் உள்ள நகைப்பட்டறையில் நகைகளை வழக்கம்போல் உருக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தீவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால் பி சோகித் உள்ளிட்ட ஊழியர்கள் 7 பேரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால் பி சோகித் உயிரிழந்தார். சிகிச்சை பெற்று வந்த நகைப்பட்டறை ஊழியர்களான மேற்குவங்கத்தை சேர்ந்த சிமந்தோமால் (47), ராகேஷ் டேலி (26), சூரஜ் (25), அரவிந்த் (27) ஆகியோர் நேற்று முன்தினம், நேற்று என அடுத்தடுத்து உயிரிழந்தனர். மீதமுள்ள 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் சவுகார்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.