Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சோப்ளாங்கி ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ‘ரெட் அலர்ட்’: கோவை பாராட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

கோவை: கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை கடந்த மாதம் 16ம் தேதி தமிழக முதல்வர் விஜய், திறந்துவைத்தார். இந்த நூலகம் அமைய காரணமான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தி.க சார்பில் கோவையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அவருக்கு மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து வேனில் புறப்பட்டு அவினாசி ரோடு நீலாம்பூர் பகுதிக்கு சென்றார். அங்கு புதிதாக கட்டப்படும் மாவட்ட திமுக அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், பெரியார் அறிவுலகம் சென்று பார்வையிட்டார்.

அவருடன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் உடனிருந்தார். அப்போது, கோவையில் தங்கி, உயர்கல்வி பயின்று வரும் சூடான் நாட்டை சேர்ந்த மாணவன் சுலைமான அஹமத் (24), மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். பெரியார் அறிவுலகம் கட்டுமான பணி மற்றும் இங்குள்ள தகவல்கள் வியப்பாக உள்ளது என மு.க.ஸ்டாலினிடம் கூறினார். மேலும், அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

பின்னர், 2வது தளத்தில் மாணவ, மாணவிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, போட்டித்தேர்வுகளில் வெல்லவேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து இந்நிலையில், இந்த நூலகம் உருவாக காரணமாக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, திராவிடர் கழகம் சார்பில் கோவை வஉசி மைதானத்தில் நேற்று மாலை பாராட்டு விழா நடந்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

என்னுடைய ஆட்சியில் பவர் செண்டரே இருக்காது என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் சொன்னாரே... ஆனால், முதலமைச்சர் விஜய்யைப் டம்மியாக்கிவிட்டு, அவருக்குப் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் பவர் செண்டர்கள் வித்தை காட்டும் சர்க்கஸ்தான், த.வெ.க. ஆட்சி. இவர்கள் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டுப் பிரச்சினை வந்துவிட்டது. அதை சரி செய்ய முடியவில்லை. நம் திமுக ஆட்சியில் குறைந்த விலைக்குப் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, இப்போது அதைவிட இரண்டு மடங்கு அதிக விலைக்கு, வெளிச் சந்தையில் மின்சாரம் வாங்குவதை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். அதற்குத்தான், இந்த மின்வெட்டு நாடகம்!

மின்வெட்டைப் போலவே, அரிவாள் வெட்டு, கொலையும் கொள்ளையும் த.வெ.க. ஆட்சியில் தொடர்ந்து வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கின்றன. சிவகங்கை, கோவை, தூத்துக்குடி, தலைநகர் சென்னை என அனைத்து ஊர்களிலும் மையப் பகுதிகளிலேயே சகஜமாகக் கொலைகள் நடக்கின்றன. அதுமட்டுமா? மூச்சுக்கு மூச்சு தூயசக்தி ஆட்சி என்று தம்பட்டம் அடித்தார்களே... அது எப்படியெல்லாம் துர்நாற்றம் அடிக்கிறது என்று சமூக ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு, இவர்களே மொத்தமாக உற்பத்தி செய்து, ஒளித்து வைத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து சிறுமிகள் காணாமல் போகிறார்கள். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் மாட்டுகிறவர்கள் யார் என்று பார்த்தீர்கள் என்றால், த.வெ.க. நிர்வாகிகள்தான் பலபேர். இளைஞரணி, மாணவரணி, மகளிரணி போல, த.வெ.க.வில் பாலியல் குற்றவாளிகளுக்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் தனிப் பிரிவு உருவாக்க வேண்டும். இவர்களுக்குக் குற்றவாளிகளைப் பிடிக்கத்தான் வக்கில்லை என்று பார்த்தால், சிறையில் இருக்கும் குற்றவாளிகள் அனைவரும் தப்பித்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு - ஒரே சமயத்தில், 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடிய வரலாற்றுச் சாதனை, இந்து தூய சக்தி விஜய் ஆட்சியில்தான் நடந்திருக்கிறது. பைல்களைத் திறக்கிறேன் என்று சொல்லிவிட்டு, இப்போது ஜெயிலைத் திறந்து கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் சரிசெய்ய முதலமைச்சர் ஏதாவது செய்வார் என்று பார்த்தால், அவர் என்ன செய்கிறார்? கோட்சூட் போடுகிறார். ஜோசியர் சொன்ன, பட்டு வேட்டி சட்டை கட்டுகிறார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களுக்கும், புழல் சிறைச்சாலைக்கும் சென்று, பரிகார பூஜை செய்கிறார். கான்வாயில் வந்து, பெரியார் அறிவுலகம், சென்னை மெட்ரோ என திமுக அரசு கட்டி முடித்த திட்டங்களைத் திறந்து வைத்துவிட்டு, கை அசைக்கிறார். 10 மணி முதல் 5 மணி வரை வேலைக்குச் செல்கிறேன் என்று பாவ்லா செய்கிறார். அதுவும், சனி, ஞாயிறு விடுமுறை. அவ்வளவுதான்! அங்கிள் விஜய் அவர்களே... முதலமைச்சர் பொறுப்பு, 10 முதல் 5 மணி வரையிலான அலுவலக வேலை இல்லை.

அதற்காக ஒட்டுமொத்தமாகத் தன்னை ஒப்படைத்துவிட்டு வாழ வேண்டும். இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் போல, கால் ஷீட்டில் மட்டும் வேஷம் போட்டுவிட்டு செட்டுக்குச் சென்றுவிட்டு வரும் வேலை கிடையாது, இதற்குமுன், தி.மு.க. ஆட்சியில் வேலைகள் எப்படி வேகமாக நடந்தன என்றும் இப்போது ஒப்பிட்டுப்பேசத் தொடங்கிவிட்டார்கள். சி.எம். சார், சினிமாவில் நடிக்கும்போது ஒரு பார்முலா வைத்திருந்தார்... என்ன பார்முலா தெரியுமா? தன்னுடைய ‘ஆன்லைன் விஷமிகள்’ மூலமாக, சக நடிகர்கள் மீது அவதூறுகளை கிளப்பிவிட்டு, அவர் வெற்றிபெறுவார். அதே ‘ரூட்’-இல், அரசியலில் ஒருமுறை வெற்றிபெற்றுவிட்டார்.

தமிழ்நாட்டு மக்களை இரண்டாவது முறையும் அவரால் உறுதியாக ஏமாற்ற முடியாது! மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்!இந்த ஆட்சி நீடிப்பது தமிழ்நாட்டு மக்களுக்கும் - தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல. இயற்கை பேரிடர் வந்தால் மஞ்சள் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட் விடுப்பது போல, த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கே ‘ரெட் அலெர்ட்’ விடப்பட்டிருக்கிறது! கூடிய விரைவில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் தமிழ்நாடு எனும் அறிவுலகத்திற்கு நல்லது. அவதூறுகளையும், பொய்களையும், போலி வீடியோக்களையும் பரப்பி, ஆளுங்கட்சி செய்துகொண்டிருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல; அசுத்தமான அரசியல் என்று மக்களுக்குப் புரிய வையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

டாப்புல இருந்த பொருளாதாரம்; ஐந்தே மாதத்தில் தரைமட்டம்

மு.க.ஸ்டாலின் பேசுகையில்“தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முதலீடுகள் எல்லாம் பக்கத்து மாநிலங்களுக்குச் செல்கின்றன. திமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே டாப்பில் இருந்த நம் தமிழ்நாடு, ஐந்தே மாதத்தில் தரைமட்டத்திற்குச் சென்றுவிட்டது. ஐந்து ஆண்டுகளில் அடைய வேண்டிய அவமானத்தை ஐந்தே மாதத்தில் வாங்கிவிட்டு, வெட்கமே இல்லாமல் வெற்றித் தமிழகம் என்று பீலா விடுகிறார்களே! இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் படுபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. அனைத்துத் தரப்பு மக்களும் வேதனையில் இருக்கிறார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், கூலித் தொழிலாளர்கள் என அனைவரின் வயிற்றிலும் அடித்துவிட்டார்கள். ஆறு மாதத்திலேயே மக்களின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்துவிட்டார்கள்” என்றார்.

மிரட்டல்களுக்கு பயந்து திமுக பின்வாங்கியதாக வரலாறே கிடையாது

‘‘தவெக மாவட்டச் செயலாளர்களும், ஒன்றியச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ, ஆடியோ லீக் ஆகிறது. ஆள் ஆளுக்கு வசூல்ராஜாக்களாக இருக்கிறார்கள். பெண் நிர்வாகிகளுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய ஆதாரங்கள் வெளிவருகின்றன. த.வெ.க. அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பதிவிடும் ரீல்ஸ்களை மிஞ்சும் வகையில், அவர்களின் திருவிளையாடல்களை அம்பலப்படுத்தும்

ரீல்ஸ்கள் வெளியாகி, சூப்பர் ஹிட் அடிக்கிறது. இந்த கேவலங்களையெல்லாம் மறைக்கத்தான், நம்முடைய முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் திரும்பத் திரும்ப ரெய்டு செய்கிறார்கள். திருச்சியில் இடைத்தேர்தல் வேறு வருகிறது. அதற்காகவும் சும்மா ஷோ காட்ட இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதுமாதிரியான அரட்டல் மிரட்டல்களுக்கு தி.மு.க. பயந்து பின்வாங்கியதாக வரலாறே கிடையாது. அழுத்த அழுத்தத்தான், நாங்கள் மேலே எழுவோம்! அதுதான், திமுகவின் டிஎன்ஏ’’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வீக்கான முதல்வர்

‘‘போதை பொருள் கடத்திய தவெக நிர்வாகியை பூபாலனை ஒன்றிய அரசு அதிகாரிகள் கைது செய்திருக்கிறார். இது பற்றி முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டுமா, இல்லையா? மாநில அரசின் காவல்துறை பூபாலனை கைது செய்யாதது ஏன்? முதல்வரான விஜய்தான் இதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். பாலியல் குற்றங்களில் அவர் கட்சியினர் தொடர்ந்து சிக்குகிறார்கள். அவர்களுக்கு இவர் இதுவரை அறிவுறுத்தல் ஏதாவது கொடுத்தாரா? லாக்-அப் மரணங்களை பற்றி வாய் திறந்தாரா? பத்திரிகையாளர்களை பார்த்தாலே பயந்து ஓடுபவராக முதல்வர் விஜய் இருக்கிறார். இவ்வளவு பலவீனமான முதல்வரை தமிழ்நாடு இதுவரை பார்த்ததே இல்லை’’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விஜய் பேசவே மாதம் ஒருமுறை இடைத்தேர்தலா?

‘‘நன்றாக ரிகர்சல் பார்த்துவிட்டு, வாகனத்தின் மேல் ஏறி நின்று ஆடிக்கு ஒருதடவை, அமாவாசைக்கு ஒருதடவைதான் பேசுகிறார். இவர் பேச வேண்டும் என்றால், மாதம் ஒருமுறை இடைத்தேர்தல் நடத்த வேண்டுமா? அப்போது கூட அவர் வாயிலிருந்து பதில் எதுவும் வராது. எதைக் கேட்டாலும் அவரிடம் இருக்கும் ஒரே பதில், தி.மு.க., தி.மு.க., தி.மு.க.! பாதி இரவில் யாராவது யாராவது எழுப்பி கேட்டால்கூட, ‘தி.மு.க.’ என்று சொல்லிவிட்டுதான் எழுவார்’’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.