புதுடெல்லி: நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வருவது குறித்துப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி காதுன் மற்றும் இவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் கடந்த ஜூன் மாதம் டெல்லியில் கைது செய்யப்பட்டு, முறையான விசாரணையின்றி வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்றும், ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் சோனாலியின் குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வந்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், ‘காவல்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது’ என்று கூறி, நாடு கடத்தப்பட்டவர்களை ஒரு மாதத்திற்குள் மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக உள்ள சோனாலிக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, வங்கதேச நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது. இதற்கிடையே கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, ‘முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் சோனாலி மற்றும் அவரது 8 வயது மகனை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வருவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

