மகன் எதிர்ப்பையும் மீறி தோட்டத்துக்காரரை சந்திக்க வரும் ஒன்றிய மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மாங்கனி ஜெயில்ல விஜிலென்ஸ் ஆபீசர்ஸை பார்த்தாலே வார்டர்களும், கைதிகளும் ரொம்பவே பயப்படுறாங்களாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்டத்துல சென்ட்ரல் ஜெயில்ல கைதிகளின் கைகளில் தவறாமல் செல்போன் தவழுதாம்.. இதற்கெல்லாம் அதிகாரிகளின் ஆதரவு கரம் இருப்பதினால்தான் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்காம்.. ஆனால் அந்த ஜெயிலை பொறுத்தவரையில் விஜிலென்ஸ் ரொம்பவே விழிப்பா இருக்குதாம்.. ஜெயில் அதிகாரிகளுக்கு பயப்படுவார்களோ இல்லையோ..
விஜிலென்ஸ் ஆபீசர்களை கண்டாலே கைதிகள் மட்டுமல்லாமல் எல்லோரும் கதறுறாங்களாம்.. வழக்கமாக காவல்துறையில் பணியாற்றும் எஸ்.ஐ. ஒருவரை ஜெயில் விஜிலென்சுக்கு அனுப்புவாங்களாம்.. ஆனால் தற்போது எஸ்.எஸ்.ஐ. ஒருவரைத்தான், விஜிலென்ஸ் ஆபீசரா போட்டிருக்காங்களாம்... இவர்கள் தான் சிறைக்குள் நடக்கும் ரகசிய தகவலை கண்டுபிடிச்சி சென்னை உயரதிகாரிகளுக்கு தெரிவிப்பாங்களாம்.. இவர்கள் யார் மீது ரிப்போர்ட் போடுகிறார்களோ... அவர்கள் அதிரடியாக மாற்றப்படுவாங்களாம்...
இவ்வாறு மட்டும் கடந்த 4 மாதத்தில் 40 கைதிகள் மாங்கனி சென்ட்ரல் ஜெயிலில் இருந்து பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டிருக்காங்களாம்.. இதையெல்லாம் பார்க்கும் ஜெயில் ஆபீசர்களும் நடுநடுங்கித்தான் இருக்காங்களாம்.. ஜெயில் மிகவும் சுமுகமாக போய்கிட்டிருக்குது.. ஆனால் திடீரென கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றுவதற்கான ஆர்டர் வந்துடுது.. இவ்வாறு மாற்றப்படும் கைதியால் சிறையில் மோதல் ஏற்படும் எனவும், அசாதாரண சூழ்நிலை நிலவுவதாகவும் சொல்றாங்க..
ஜெயிலை நடத்தும் எங்களுக்கு தெரியாமல் எப்படி கலவரம் நடக்கும்? இதற்கு என்ன காரணமுன்னே தெரியல.. விஜிலென்சை பார்த்தாலே வார்டர்களும், கைதிகளும் பயப்படுறாங்க.. என்ன நடக்குதுன்னே தெரியலன்னு ஒரே புலம்பலா இருக்குதாம்.. இதற்கெல்லாம் இன்னும் ரெண்டு மாதத்துல நல்லகாலம் பிறக்குமுன்னு ஜெயில் ஆபீசர்கள் நம்பிக்கையோடு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வசூலுக்கு தயாரான புதிய சுங்கச்சாவடியால் கொந்தளிப்பில் இருக்காங்களாமே யூனியன்வாசிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வட தமிழகத்தில் நாகை புறவழிச்சாலையில் யூனியன் பகுதியும் இடம்பெற்றுள்ளதாம்.. இங்குள்ள மேடு பகுதியில் புதிய சுங்கச்சாவடி அமைய இருமாநில கிராம புறவாசிகளும் சேர்ந்து போர்க்கொடி தூக்கினார்களாம்.. அப்போது ஒன்றிய அரசும், நெடுஞ்சாலை ஆணையமும் சட்ட விரோதமாக சுங்கச்சாவடி அமைப்பதாக குற்றம் சாட்டினார்களாம்.. சுங்கச்சாவடி பணிக்கு தடைபோட நீதிமன்றத்தை நாட சில பொதுநல ஆர்வலர்கள் தயாராக, அவசரம் அவசரமாக சாவடி அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாம்..
புத்தாண்டில் திறப்பு விழா காணலாம் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்திருக்க, பண்டிகை தொடர் விடுப்பு காலம் என்பதால் ஒருவாரத்துக்கு முன்பே செயல்பாட்டுக்கு வருகிறதாம்.. இதற்கான கட்டண பட்டியலும் வெளியாகிவிட்ட நிலையில் மீண்டும் புல்லட்சாமியை சந்தித்து போராட்டக்குழு மனு கொடுத்து உள்ளார்களாம்.. இனி மனு கொடுத்தும் பயனில்லையே என்ற கொந்தளிப்பில் யூனியன்வாசிகள் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூட்டணி என பார்க்காமல் சேலத்துக்காரருக்கு எதிராக குறிப்பிட்ட மாவட்ட 4 தொகுதிகளில் இலைக்கட்சிக்கு எதிராக வேலை செய்ய குக்கர்காரர் உத்தரவிட்டுள்ளாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்திற்கு சமீபத்தில் குக்கர்காரர் வந்திருந்தார்.. தனது கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டவர், நாம் ஒருபோதும் சேலத்துக்காரரை ஏற்க முடியாது. அவருக்காக கூட்டணி என்ற பெயரில் வேலை பார்க்க முடியாது.
ஒருவேளை மலராத கட்சி தரப்பு ஏதாவது காரணங்களுக்காக நம்மை மிரட்டி சேர்க்க வைத்தாலும், நாம் அவருக்காக வேலை பார்க்க முடியாது. கூட்டணியில் இருந்தாலும் சேலத்துக்காரரின் தோல்வி மட்டும் தான் நமது முக்கிய இலக்கு.. அதற்கேற்ப நாம் இலைக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக மறைமுகமாக களப்பணியாற்ற வேண்டுமென ரகசிய ஆலோசனைகளை கூறி சென்றுள்ளாராம்.. குறிப்பாக, இம்மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலும் இலைக்கட்சியினர் நிற்கும் தொகுதிகளில் கண்டிப்பாக உள்ளடி வேலை பார்க்க வேண்டுமென குக்கர்காரர் கூறிச் சென்றுள்ளார்.
இதன்படி, தற்போது இலைக் கட்சியினருக்கு எதிரான வேலைகளில் குக்கர் தரப்பினர் ஈடுபட்டுள்ளனராம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மகன் எதிர்ப்பையும் மீறி தோட்டத்துக்காரரை சந்திக்க வருகிறாராமே ஒன்றிய மந்திரியானவர் பியூஸ்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தைலாபுரத்து தோட்டத்துக்காரரும், பனையூரில் உள்ள மகனும் காஷ்மீர் மிளகாய் போல உக்கிரமாக இருக்காங்களாம்.. தந்தை நடத்தும் பொதுக்குழு செல்லாது என சொல்லும் மகன், நானே தலைவர் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது என்று அடிச்சி சொல்லிக்கிட்டு இருக்காராம்..
ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் இது எடுபடலையாம்.. இதற்கிடையில் இலைக்கட்சியும் மலராத கட்சியும் தேர்தல் சீட் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்காங்க.. ஒன்றிய மந்திரி பியூஸ் நேரடியாக வந்து பேசியிருக்காரு.. இவர் தான் தேர்தல் ஆணையம் மூலமாக மகனை தலைவர் என அங்கீகாரம் செய்ய வச்சவருன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதன் மூலம் தந்தை வேறு கட்சியை தொடங்கிடுவாரு, இல்லைன்னா கட்சியை தம்மிடம் கொடுத்திடுவாருன்னு நினைச்சாராம் மகன்...
ஆனால் தந்தை ஒருபடி மேலேயே போய் சுப்ரீம்கோர்ட்டுக்கு சென்று வெற்றிகண்டதாக அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க.. இந்த நிலையில் பியூஸ் கோயல், ஓரிரு நாட்களில் தோட்டத்துக்கு போகப்போறாராம்.. உடைந்து கிடக்கும் பாமகவை ஒன்றிணைப்பதுடன், கூட்டணிக்குள் ரெண்டு பேரையும் கொண்டு வருவது தான் அவரது திட்டமாம்.. மகனுக்கு சப்போர்ட் செய்யும் இந்த பியூசை தந்தை தரப்பினர் சந்தேக கண்ணோடுதான் பார்க்கிறாங்களாம்..
மகனின் எதிர்ப்பை மீறித்தான் பியூஸ், தோட்டத்துக்கு வருவதாகவும் சொல்றாங்க... இதற்கிடையில் தந்தை ஒவ்வொரு மா.செ.,க்களின் கூட்டத்தை கூட்டியிருக்காரு.. யாருடன் இணைவது என்பதை சொல்லுங்கன்னு பேப்பர் கொடுத்தாராம்.. ஒவ்வொருவரும் யாருடன் சேர்ந்தால் கரைசேர முடியும் என்பதை எழுதி கொடுத்திருக்காங்க.. அதோடு ‘‘உங்கள் பேச்சே எங்களது சுவாசமுன்னும்’ கண்கலங்க சொன்னாங்களாம்..
ஆக மொத்தம் தந்தையும் மகனும் ஒரே கூட்டணியில தான் இருப்பாங்கன்னு சொல்லும் கட்சிக்காரங்க.. அந்த பக்கம் கொஞ்சம் சீட்டு, இந்த பக்கம் கொஞ்சம் சீட்டோடு வாங்க வேண்டியதையும் வாங்கிடுவாங்க.. இவர்களை நம்பி வந்த மா.செ.க்கள் தான் தோல்வி என்ற பட்டத்தோடு வெளியே நிக்கணுமுன்னு வேதனையோடு சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


