சோலூர்-கோக்கால் சாலை ஓரிரு நாளில் சீரமைப்பு: அதிகாரிகள் தகவல்
ஊட்டி: சோலூர் முதல் கோக்கால் வரையிலான சாலை ஓரிரு நாட்களில் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஊட்டி சோலூர் அருகேயுள்ள தூபக்கண்டி பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதேபோல், கன்னனேரிமூக்கு பகுதியிலும் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிபள்ளி மாணவர்கள் சோலூர் மற்றும் கோக்கால் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். மேலும், இப்பகுதி மக்கள் அனைத்து தேவைகளுக்கும் ஊட்டிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், சோலூரிலிருந்து தூபக்கண்டி வழியாக கோக்கால் செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இச்சாலையை சீரமைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்கனவே இருந்த பழுதடைந்த சாலை தோண்டப்பட்டுள்ளது. இதனால், சாலை முழுவதும் ஜல்லி கற்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆனால், உடனடியாக இச்சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், கன்னேரிமூக்கு மற்றும் தூபக்கண்டி போன்ற பகுதிகளில் இருந்து சோலூர் மற்றும் கோக்கால் பகுதி பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பள்ளி வாகனங்கள் செல்லாத நிலையில் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, பள்ளி வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் செல்லும் வகையில் இச்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். விரைவில் சீரமைக்கப்படவில்லை எனில் போராட்டம் நடத்தவும் பொதுமக்கள் தீர்மானித்திருந்தனர். இந்நிலையில், சோலூர் பேரூராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இச்சாலையை ஓரிரு நாட்களில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.