சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது: விண்ணப்பிக்க 18ம் தேதி கடைசி நாள்
சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்வரால் தேர்வு செய்யப்படுகிறார். 2025ம் ஆண்டிற்கான உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் உள்ளிட்ட தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் 18ம் தேதி ஆகும். விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், 2-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை-600001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.