Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

காது கேட்கலைன்னா என்ன? சாதிக்க எதுவும் தடை இல்லை

சொல்கிறார் சாரிகா ஜெகதீஷ்!

“உன்னால முடியாது...” இந்த வார்த்தையை நான் நிறைய முறை கேட்டிருக்கேன். ஆனா, அதையே எனக்கான சவாலா எடுத்துக்கிட்டு, “என்னால முடியும்”ன்னு நிரூபிச்சுக்கிட்டே இருக்கேன். என்னும் சாரிகா ஜெகதீஷ் சென்னை தாஜ் பிஷர் மென்ஸ் அரங்கில் நடந்த ‘மிஸ் டீன் யுனிவர்ஸ் தமிழ்நாடு 2026’ பட்டத்தை பெற்று கிரீடத்தை வென்று இருக்கிறார். சாரிகா ஜெகதீஷ்க்கு பிறவியிலேயே காதுகள் கேட்காது என்பதுதான் ஆச்சர்யம். ஏனெனில் ராம்ப் வாக் மற்றும் அழகிப்போட்டி களுக்கு அதன் இசையை கேட்டு அதன்படி நடப்பது தான் அடிப்படை. ஆனால் அதெல்லாம் ஒரு தடையே இல்லை என நிரூபித்துக்காட்டியிருக்கிறார் இந்தக் குட்டி மங்கை சாரிகா.

“நான் சாரிகா ஜெகதீஷ். பிறந்ததிலிருந்தே ரெண்டு காதுகளும் எனக்குக் கேட்காது. அந்த விஷயம் எங்க குடும்பத்துக்கு ரொம்ப கஷ்டமா இருந்தாலும், என்னை ஒரு குறையா அவங்க எப்பவும் பார்த்தது இல்லை. மத்த குழந்தைகள் மாதிரி எல்லாத்தையும் கத்துக்கணும் என்கிறதுதான் அவங்களோட ஆசை.

இரண்டு வயசுல இருந்தே ஹியரிங் மெஷின் ( செவித்திறன் கருவி) பயன் படுத்த ஆரம்பிச்சேன். சென்னை பாலவித்யாலயா பள்ளியில் படிச்சுட்டு இருக்கேன். பொதுவா மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை அதற்கான ஸ்கூலில் சேர்க்கச்சொல்வாங்க. ஆனால் என்னுடைய ஸ்கூல் என்னை மற்ற குழந்தைகள் போலவே பார்த்தாங்க. மத்தவங்க கூட பழகுறது எல்லாமே கொஞ்சம் சிரமமாத்தான் இருந்தது. ஆனா, அம்மா, அப்பா, ஆசிரியர்கள் கொடுத்த தைரியத்தால அந்தத் தடைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கடந்து வந்தேன். படிப்பு மட்டுமில்லாம யோகா, விளையாட்டு, நீச்சல், ஓவியம், மனப்பாடப்போட்டிகள்னு கிடைக்கிற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கிட்டேன்.

என் வாழ்க்கையிலேயே பெரிய திருப்பு முனை மாடலிங். ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையா ராம்ப்பில் நடக்கணும்னு நான் ஆசைப் பட்டதுக்கே பல பேர் என்னை கேலி செய்தாங்க. ஒருமுறை ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் அழகிப் போட்டியில் ஜெயித்த கிரீடம் பார்த்த பிறகுதான் எனக்கு அதன் மேல் ஆசை வந்தது. என் ஆசைக்கேற்ப வாய்ப்புகளும் வந்தப்போ, நான் ஒருத்தி இந்த தடையை உடைத்து வெளியே வந்தால், என்னைப் போல இருக்கிற நிறைய குழந்தைகள் தன்னம்பிக்கையா வெளியே வருவாங்க என்கிறதுக்காகவே ஏத்துக்கிட்டேன். பதினோரு வயசுல மாடலிங் துறையில் அடியெடுத்து வச்சேன்” பேச்சில் அவ்வளவு தெளிவு பக்குவம், தொடர்ந்து பேசினார் சாரிகா.

2024ஆம் ஆண்டு துபாயில் நடந்த உலக ஃபேஷன் வீக்கில் பங்கேற்ற ஒரே தென்னிந்திய டீன் மாடல் என்ற பெருமை எனக்குக் கிடைச்சது. அந்த மேடையில் நடந்தப்போ, நான் எனக்காக மட்டும் நடக்கலை “மாற்றுத்திறன் இருந்தாலும் எதுவும் சாதிக்க முடியும்”ன்னு உலகத்துக்கே சொல்லணும்னுநினைச்சே தான் நடந்தேன். மிஸ் யுனிவர்ஸ் தமிழ்நாடு 2026, மதராசே மிஸ் டீன் இந்தியா 2024, ஜூனியர் ஃபேப் ஸ்டார் ஆஃப் இந்தியா, ஜூனியர் மிஸ் சென்னை, மதராசே ஜூனியர் மிஸ் இந்தியா என நிறைய பட்டங்கள் கிடைச்சிருக்கு. இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், லண்டன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்லயும் இடம் பிடிச்சிருக்கேன். இருபதுக்கும் மேற்பட்ட விருதுகள் கிடைச்சிருக்குது. ஆனா, இதெல்லாத்தையும் விட எனக்கு சந்தோஷம் தர்ற விஷயம் வேறு” என்னும் சாரிகா போட்டிகள் மற்றும் விளம்பரங்கள் மூலமாக வரும் வருமானத்தை தன்னைப் போலவே இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வளர்ச்சியில் செலவிட்டு கொண்டிருக்கிறார்.

“என்னைப் போல இருக்கற குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காகத்தான் ‘தி குளோபல் ரைசிங் சேலஞ்சர்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கினேன். மாடலிங், நடிப்பு, விளம்பரங்கள்ல எனக்கு வர்ற வருமானத்துல ஒரு பகுதியை அந்தக் குழந்தைகளுக்காக செலவு பண்றேன்.

இதுவரைக்கும் 14 குழந்தைகளுக்கு மாடலிங் பயிற்சி கொடுத்திருக்கேன். அதுல எட்டு பேர் மாற்றுத்திறனாளிகள். அவங்க மேடையில் தைரியமா நடக்குறதையும், போட்டிகள்ல ஜெயிக்குறதையும் பார்க்கும்போது, நான் வாங்குற எந்த விருதையும் விட அதிக சந்தோஷமா இருக்கு. மூன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளை சர்வதேச ஃபேஷன் நிகழ்ச்சிகள்ல பங்கேற்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கேன். கார் தெரபி சென்டரின் இன்க்ளூசிவ் எஜுகேஷன் திட்டம், டிஎஸ்டபிள்யூ டிரஸ்ட், மதராசே யுனிவர்சல் கான்டெஸ்ட் ஆகியவற்றுக்கு பிராண்ட் அம்பாசிடரா செயல்பட்டு வர்றேன். எல்லா குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கணும் என்பதுதான் என்னோட ஆசை.

நிறைய பேர் என்னைப் பார்த்து, “உனக்கு காது கேட்காது... எப்படி இவ்வளவு தைரியமா இருக்க?”ன்னு கேட்பாங்க. நான் ஒரே ஒரு விஷயம்தான் சொல்வேன். “காதால் கேட்க முடியலன்னா என்ன? மனசு சொல்லுறதை கேட்டு நடந்தா போதும்.”

என் வாழ்க்கையில நான் கத்துக்கிட்ட ஒரு விஷயம் என்னன்னா, மாற்றுத் திறன் என்பது நம்ம கனவுகளுக்கு தடை போடாது. நாம நம்மளை நம்பணும். அப்புறம் உலகமே நம்மளை நம்ப ஆரம்பிச்சிடும். இன்னும் நிறைய சாதிக்கணும். அதைவிட, என்னைப் போல இருக்கற நிறைய குழந்தைகளை மேடைக்கு கூட்டிக் கொண்டு வரணும். அவங்க யாரும் “என்னால முடியாது”ன்னு நினைக்கக் கூடாது.”என்னாலயும் முடியும்”ன்னு தைரியமா சொல்லணும். எனக்கு காதுகளால் எல்லா சத்தங்களையும் கேட்க முடியாம இருக்கலாம். ஆனா, என் கனவுகளின் சத்தம் தெளிவா கேட்குது. அந்தக் கனவுகளை நோக்கி நான் தொடர்ந்து பயணிச்சிட்டே இருக்கேன் , என்னுடைய வளர்ச்சிக்கு நிறைய பேர் பின்னாடி இருந்து எனக்கு உதவி செய்யறாங்க. நந்தினி நடராஜன் மேடம், அவங்க தான் என்னை மிஸ் யூனிவர்ஸ் போட்டிக்கு தயார் செய்ய போறாங்க. டைரக்டர் நிகில் ஆனந்த் சாருக்கு என் நன்றிகள். இது எல்லாத்துக்கும் எனக்கு ஆரம்பப்புள்ளி வைத்து என் கூடவே இப்போது வரை சப்போர்ட் செய்கிறார் சஃபி சார் அவருக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி”.

இவ்வளவு தன்னம்பிக்கை, தைரியம் , பக்குவமாக பேசும் சாரிகாவின் அப்பா ஜெகதீஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அம்மா வித்யா ஹவுஸ் வைஃப். ரெண்டு பேரும் மகளின் கனவுகளை நிறைவேற்ற அவருக்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். 2026 நவம்பர் மாதம் டெல்லியில் நடக்கவிருக்கும் மிஸ் யூனிவர்ஸ் தமிழ்நாடு போட்டியிலும் தமிழ்நாடு சார்பாக கலந்து கொள்ளவிருக்கிறார். வாழ்த்துக்கள் சாரிகா!

- ஷாலினி நியூட்டன்