சென்னை: சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நல வாழ்வு மற்றும் மருத்துவம் சார்ந்த உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்து வருகிறார்.
பண்ருட்டி மருத்துவமனையில் பாம்புகடி சிகிச்சைக்கு போதுமான மருந்துகள் உள்ளன என மக்கள் நலவாழ்வு அமைச்சர் அருண்ராஜ் கூறினார். தனது தொகுதியில் தாலுக்கா மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என திமுகஎம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதே போல கடலூர் மருத்துவமனைக்கு நிகராக பண்ருட்டி மருத்துவமனையில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் மோகன் கோரிக்கை விடுத்தார். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வள்ளியூர் மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு பிரிவையும் மேம்படுத்த வேண்டும் என எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ் உறுப்பினர் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி பாம்பு கடி மருந்து வசதி செய்து தர வேண்டும் என திமுக எம்எல் ஏ கே.என்.நேரு கேட்டு கொண்டார்.
நெல்லை, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல்லில் செவிலியர் கல்லூரிகள் அமைக்கபெறும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் அறிவித்தார். இன்னும் பல மாவட்டங்களில் செவிலியர் கல்லூரிகள் அமைய படிப்படியாக முன்முயற்சிகள் எடுக்கப்படும் என்றார். செவிலியர் கல்லூரிகளுக்காக ரூ.270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.



