Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெற்களஞ்சியத்தில் மணம் வீசும் மல்லிகை!

மழைச்சாரல் சன்னமாக பன்னீர்த்துளிகள் போல் தெளித்துக் கொண்டிருந்த அதிகாலை வேளை. தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையத்தில் உள்ள தங்களின் தோட்டத்தில் மல்லிகைப் பூக்களை அறுவடை செய்து கொண்டிருந்தனர் அண்ணன் தம்பியான சங்கரும், சதீசும். இளையவரான சதீஷ் வழக்கறிஞர் தொழில் பார்த்துக்கொண்டே இந்த விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர், தங்களது விவசாய அனுபவம் குறித்து நம்மிடையே உரையாடினார். ``ஆரம்பத்தில் எங்கள் முன்னோர் நெல் சாகுபடிதான் செய்தார்கள். பிறகு சிறிய அளவில் மல்லிகைப்பூவை சாகுபடி செய்தனர். பின்னர் நானும் எனது அண்ணனும் நெல் சாகுபடியில் போதிய லாபம் கிடைக்காததால் முழுமையாக மல்லிகைப்பூ சாகுபடியில் இறங்கி விட்டோம். மல்லிகை சாகுபடியைப் பொருத்தவரை, அதுகுறித்து நன்கு தெரிந்திருந்தால் மட்டுமே லாபம் பெற முடியும். சரியான முறையில் பராமரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் களை மண்டி மகசூல் பாதிக்கும். ஏற்கனவே அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டதை வைத்து நாங்கள் இருவரும் இயற்கை முறையிலேயே மல்லிகையை ஒன்றரை ஏக்கரில் சாகுபடி செய்திருக்கிறோம்’’ என்றவர், மேலும் தொடர்ந்தார்.

``மல்லிகையை சாகுபடி செய்ய முதலில் வயலை 4 முறை நன்றாக உழுது, மாட்டுச்சாணம், காய வைத்து பொடியாக்கிய ஆட்டுச்சாணம் ஆகியவற்றை கடைசி உழவில் தெளிப்போம். நிலத்தைத் தயார் செய்த பின்பு ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் இருந்து வாங்கி வந்த மல்லிகை நாற்றுகளை ஒரு வயலின் ஒரு பகுதியில் 5க்கு 5 என்ற இடைவெளியில் நட்டோம். மற்றொரு பகுதியில் 4க்கு 4 என்ற இடைவெளியில் நட்டோம். பதியன் குச்சிகளை ஆடி மாதம் நடவு செய்வது நல்லது. நடவின்போது சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது 1x1x1 அடி அளவுள்ள குழிகளை வெட்டி, ஒரு மாதம் ஆறப்போட வேண்டும். ஒரு மாதம் கழித்து மண்புழு உரத்துடன் சிறிது மக்கிய ஆட்டு உரம் மற்றும் மண் கலந்து தயார் செய்து கொள்ள வேண்டும். நடவு செய்யும்போது செடியைச் சுற்றிலும் சிறிது மண் அணைத்து நடவு செய்ய வேண்டும். இதனால் வேர்ப்பிடிப்பு நன்றாக இருக்கும். இயற்கை உரம் தெளித்து வயலை உழுததால் அதற்கு மேல் எவ்வித இயற்கை உரமும் இடவில்லை. நடவு செய்த 15 நாட்களில் வேர் பிடித்து செடிகள் வளர ஆரம்பிக்கும். நடவு செய்த 30ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை களையெடுக்க வேண்டும். முதல் ஒரு வருடத்திற்கு செடிகளை முறையாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை அறுவடை செய்ய முடியும். முதல் வருடத்தில் எவ்வித சாகுபடியும் செய்யவில்லை. மாதம் ஒருமுறை களை பறித்தல், தேவையாக இருந்தால் மட்டும் தண்ணீர் பாய்ச்சுவது போன்ற பணிகளை மேற்கொண்டோம்.

சூரிய ஒளி நன்கு இருந்தால் சாகுபடியும் அதிகரிக்கும். முதல் ஆறு மாதத்திலேயே செடிகள் நன்கு வளர்ந்து விடும். ஆரம்பத்தில் 3 கிலோ மட்டுமே அறுவடை செய்தோம். தினமும் அதிகாலையில் 3 மணிக்கு ஆரம்பித்தால் 5 மணிக்குள் அறுவடையை முடித்து விட்டு தஞ்சையில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்களை விற்பனை செய்து விடுவோம். ஒரு வருடம் முடிந்த பின்னர் தினமும் 8 கிலோ முதல் 10 கிலோ வரை அறுவடை செய்தோம். மல்லிகைச் செடிகளை அதிகம் தாக்குவது செம்பேனும், மொட்டுத் துளைப்பானும்தான். கற்பூரக் கரைசல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்தக்கரைசலை மாற்றி மாற்றி தெளித்து வந்தால் எந்தவித பூச்சி தாக்குதலும் இருக்காது. இரண்டாவது வருடம் முதல் பூ சீசன் முடிந்த பிறகு கவாத்து செய்து, செடிகள் அதிக உயரம் வளராமல் தடுக்க வேண்டும். இதனால் அதிக துளிர்கள் தோன்றும். மேற்சொன்ன இயற்கை சாகுபடி முறையை பின்பற்றினால் வருடம் முழுவதும் பூக்கள் பறிக்கலாம். மகசூலும் அதிகமாக இருக்கும்.

மார்ச் தொடங்கி ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதம் வரை பூக்கள் அதிகளவில் பூக்கும். மார்கழி மாதத்தில் மகசூல் குறைய ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் செடிகளை தரையிலிருந்து ஒரு அடி உயரம் மட்டும் விட்டு கவாத்து செய்ய வேண்டும். இதனால் புதிய தளிர்கள் முளைத்து ஒன்றரை மாதங்களில் மீண்டும் பூவெடுக்கும்.ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.50ல் இருந்து ரூ.1,000 வரை விற்பனையாகும். தினமும் சராசரியாக 8 முதல் 12 கிலோ பூ கிடைக்கும். பூ விற்பனை மூலம் அனைத்து செலவுகளும் போக மாதம் ரூ.25 ஆயிரம் லாபம் கிடைக்கும்’’ என மகிழ்ச்சி பொங்க பேசி முடித்தார்.

தொடர்புக்கு:

சதீஷ்: 98942 81877.