மதுரை: நம் வீடுகளில் தினசரி சமையலுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குடும்பத்தை பொருளாதார ரீதியாக வழி நடத்துபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களின் சில்லறை சந்தைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மதுரையிலோ சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.100-ஆக உயர்ந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தேனி, கரூர் மாவட்டங்களில் வெங்காய விளைச்சல் குறைந்ததால் வரத்தும் குறைந்தது, இதனால் சின்ன வெங்காயத்தின் விலை மதுரையில் ரூ.100-ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரம் தமிழகத்தின் பிற பகுதிகளில் சராசரியாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.78 வரையிலான விலையில் விற்பனையாகிறது. இது குறித்து பேசிய வியாபாரிகள் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் வரத்து பாதியாகக் குறைந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.
இதனிடையே வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு கையிருப்பில் உள்ள வெங்காயத்தை முதல் கட்டமாக சென்னை, மதுரை, டெல்லி, கவுகாத்தி, எர்ணாகுளம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



