Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பெரு விளைச்சல் தரும் சிறுதானிய ரகங்கள்!

தற்போதைய காலகட்டத்தில் நோய்கள் பெருகி வரும் சூழலில் சிறுதானிய உணவுகள் மீது பலரது கவனம் திரும்பி இருக்கிறது. இதனால் சிறுதானிய சாகுபடியும் முன்னெப்போதையும் விட தற்போது விவசாயிகளால் விரும்பி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தேசிய அளவில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகமும், மாநில அளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமும் இணைந்து சிறுதானியப் பயிர்களில் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளின் விளைவாக பல சிறந்த புதிய ரகங்களையும், சாகுபடி தொழில்நுட்பங்களையும் உழவரின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது. இத்தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தி விவசாயிகள் சிறுதானிய சாகுபடியைத் துவக்கி அமோக விளைச்சல் பெறலாம்.

கேழ்வரகு பருவம்

இறவையாக மார்கழி (டிசம்பர்- ஜனவரி), சித்திரை (ஏப்ரல் - மே) பட்டங்களிலும், மானாவாரியாக ஆடி (ஜூன் - ஜூலை), புரட்டாசி பட்டங்களிலும் பயிரிடலாம்.

உயர் விளைச்சல் ரகங்கள்

கோ 14, பையூர் 2, கோ 15.

விதையளவு மற்றும் இடைவெளி

நாற்றங்கால் முறையில் பயிரிட எக்டருக்கு ஐந்து கிலோ விதையளவும் நேரடி விதைப்பிற்கு பத்து முதல் பதினைந்து கிலோ விதையளவும் தேவைப்படும். நாற்றங்கால் பாசனத்திற்கு ஏற்ப பாத்திகளின் அளவு 10 முதல் 20 அடி வரையும், பாத்திகளின் இடைவெளி 30 செ.மீ. வரையும் இருக்கலாம்.

விதை நேர்த்தி

குலைநோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கலவையை கலந்து விதைக்க வேண்டும்.

வறட்சி மேலாண்மை

வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு சத பொட்டாசியம் குளோரைடு அல்லது 1 சதவிகித பிபிஎய்எம் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

உர நிர்வாகம்

பொதுவாக மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால், பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை எக்டருக்கு முறையே 60 - 30 - 30 கிலோ இட வேண்டும். விதைக்கும்போதே அடியுரமாக மணி, சாம்பல் சத்துக்களை முழுவதுமாக இட வேண்டும். தழைச்சத்தை மட்டும் பாதி அளவு இட்டு, மீதமுள்ளதை சரிபாதியாகப் பிரித்து மேலுரமாக இருமுறை இட வேண்டும். பருவ மழை சரியாக இல்லாத காலங்களில் தழைச்சத்து 50 விழுக்காட்டையும் மேலுரமாக இடலாம்.

களை மேலாண்மை

விதைத்த அல்லது நாற்று நட்ட 18ம் நாள் ஒரு களையும், 45ம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும் அல்லது ஒரு எக்டருக்கு இரண்டு லிட்டர் பூட்டாகுலோரலின் களைக்கொல்லியை 500 லிட்டர் தண்ணிருடன் கலந்து நாற்று நட்ட மூன்றாம் நாள் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

பூச்சி, நோய் மேலாண்மை

குலை நோயைக் கட்டுப்படுத்த ட்ரைகிளசோல் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும். தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்த 4 - 1 என்ற விகிதத்தில் தட்டைப்

பயறை ஊடுபயிராக விதைத்தல் வேண்டும்.

சாமை

உயர் விளைச்சல்

ரகங்கள் - கோ (சாமை) 4.

பருவம்

ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் சாமையைபயிரிடலாம்.

இடைவெளி

வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. மற்றும் செடிக்கு செடி 7.5 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம்.

விதையளவு

வரிசை விதைப்பிற்கு ஒரு எக்டருக்கு 10 கிலோ விதையும், தூவுவதற்கு ஒரு எக்டருக்கு 15 கிலோ விதையும் தேவைப்படுகிறது.

விதை நேர்த்தி

ஒரு எக்டருக்கு 600 கிராம் அஸோபாஸை தேவையான அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு கிலோ அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 எக்டருக்கு 2கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.

வறட்சி மேலாண்மை

வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு சத பொட்டாசியம் குளோரைடு அல்லது 1 சதவிகித பிபிஎய்எம் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

உர நிர்வாகம்

20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோவை அடியுரமாக இட வேண்டும். மேலும், விதைத்த 20-25 நாட்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி 20 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இடவேண்டும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

பெரும்பாலும் சாமை பயிரை பூச்சிகள் தாக்குவதில்லை என்றாலும் சில சமயங்களில் குருத்து ஈ சாமையைத் தாக்கி அழிக்கின்றது. இப்பூச்சியைக் கட்டுப்படுத்த விதைப்பை தள்ளிப்போடாது பருவ மழை தொடங்கிய உடனே விதைக்கலாம்.

தினை

உயர் விளைச்சல் ரகம் - கோ 7.

பருவம்

ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் தினையை பயிரிடலாம்.

இடைவெளி

வரிசைக்கு வரிசை 22 செ.மீ. மற்றும் செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம்.

விதையளவு

வரிசை விதைப்பிற்கு ஒரு எக்டருக்கு 10 கிலோ விதையும், தூவுவதற்கு ஒரு எக்டருக்கு 15 கிலோ விதையும் தேவைப்படுகிறது.

விதை நேர்த்தி

எக்டருக்கு 600 கிராம் அஸோபாஸை தேவையான அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு கிலோ அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 எக்டருக்கு 2கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.

வறட்சி மேலாண்மை

வறட்சி காலஙளில் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு சதவிகித குளோரைடு அல்லது 1 சதவிகித பிபிஎய்எம் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

உர நிர்வாகம்

விதைப்பின்போது 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். மேலும், 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20-25 நாட்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி மேலுரமாக இட வேண்டும்.

பூச்சி, நோய் மேலாண்மை

பெரும்பாலும் இந்தப் பயிரை பூச்சிகள் தாக்குவதில்லை.