தூங்கா நகரில் 3 தொகுதிகளை கேட்டு இலை கட்சியினரை அதிரவைக்கும் மலராத கட்சியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘தேர்தல் சீட்டுக்காக மலராத கட்சியில் மாஜி எம்எல்ஏக்களின் சண்டை ஓயவில்லை போல..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் மலராத கட்சியில் புரம் என்று முடியும் மாவட்டத்தில் மாஜி எம்எல்ஏக்கள் சண்டை, கட்சியில் சேர்ந்தது முதல் முடிவுக்கு வரவில்லையாம். தேர்தல் நெருங்க நெருங்க தற்போது இவர்களின் சண்டை வீதிக்கு வந்திருக்கிறதாம். ஆளும்கட்சி, நடிகர் கட்சி என பல கட்சிக்கு சென்று விட்டு தற்போது மலராத கட்சியில் ஐக்கியமான நான்கு எழுத்து பெயரைக் கொண்ட மாஜி எம்எல்ஏவும், சேலத்துக்கனி கட்சியில் இருந்து தாவிய மற்றொரு மாஜி எம்எல்ஏவும் கட்சி பதவிக்காக துவங்கிய சண்டை தற்போது தேர்தல் சீட்டுக்காக நீடித்து வருகிறதாம்.
திருக்கோவிலூர் தொகுதியில் இருவரும் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தற்போது இந்த தொகுதியில் சீட்டுக்காக போராடி வருகிறார்களாம். அதன்படி நான்கெழுத்து பெயரை கொண்ட மாஜி எம்எல்ஏ, புதுசா வந்த மாநிலத் தலைவரை அழைத்து தொகுதியில் தடபுடலாக பிரசாரம் நடத்தி இருக்கிறாராம். ஓய்வு பெற்ற காக்கி மாஜி மாநில தலைவர் மூலம் பதவிக்கு வந்த மற்றொரு மாஜி எம்எல்ஏ, சீட்டுக்காக காய் நகர்த்தி வருகிறாராம்.
இதில் புதுசா வந்த மாநிலத் தலைவரை ஓரங்கட்டும் விதமாக காக்கி ஆதரவு மாஜி எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த பிரசாரத்தை புறக்கணித்தார்களாம். தற்போது இந்த தொகுதியில் சீட்டு வாங்குவதற்காக மாஜி எம்எல்ஏக்களிடையே மோதல் மட்டுமல்ல, புதுசா வந்த மாநிலத் தலைவருக்கும், மாஜி காக்கி தலைவருக்கும் இடையே நீடிக்கும் மோதல் தான் என்கின்றனர் மலராத கட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதென்ன 8 பர்சன்டேஜ் மேட்டர்..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துல, மிக்சிங்ஐ தமிழில் மொழி பெயர்த்தால் வரும் பேரூராட்சியில 15 வார்டுகள் இருக்குது. இங்க பல டெவலப்மெண்ட் ஒர்க் நடந்து வருது. இதுல ஒரு வருஷமாக மிக்சிங், பாக்கம் மற்றும் கிரிவலம் மாவட்டத்துல கண்ணத்துல தொடங்கி மங்கலத்துல முடியுற பேரூராட்சிகள்ல ஜூனியர் இன்ஜினியராக ஒருத்தரு பணிபுரிஞ்சு வர்றாரு. இதுல மிக்சிங் பேர் ஊராட்சிக்கு மாதம் ஒருமுறை கூட அந்த இன்ஜினியர் வர்றதே இல்லையாம். வளர்ச்சி பணிகள் நடக்குற இடங்களுக்கு செல்லாம இருக்குறதுக்காக 8 பர்சன்டேஜ் வாங்கிட்டு ஆய்வு செய்றதில்லையாம். அதனாலத்தான் பணிகள் தரமானதாக இல்லைன்னு சொல்லி, அந்த மிக்சிங் பேரூர் பிரசிடெண்ட், டெபுடி பிரசிடெண்ட்டுன்னு ஒர்க் சூப்ரவைசர் கிட்ட தகராறில் ஈடுபட்டிருக்குறாங்க. இந்த தகராரோட நடந்த புகார் மேட்டர், வெயிலூர் சோனல் அதிகாரிக்கும் புகாராக போயிருக்குதாம். இந்த 8 பர்சண்டேஜ் மேட்டர் தான் குயின்பேட்டை தொடங்கி, கிரிவலம், வெயிலூர் என்று 3 மாவட்டங்கள்லயும் பனியிலும் ஹாட்டாக போய்கிட்டிருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைத்தலைவருக்கு மலராத கட்சி கொடுத்த அதிர்ச்சி என்னவாம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சிக்கு தூங்கா நகர் மாவட்டத்தில் 3 தொகுதிகள் வேண்டும் என கேட்பதால் இலைக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த எம்பி தேர்தலில் 2 கட்சிகளும் தனித்தனியாய் போட்டியிட்டனர். இதனால் தூங்கா நகர் எம்பி தொகுதியில் மலராத கட்சி இரண்டாம் இடத்தை பிடித்தது. இலைக்கட்சி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன்பிறகு இரண்டு கட்சியினரும் நேரில் பார்த்தால் கூட பேசுவதை தவிர்த்து வந்தனர். இந்த சூழலில் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி வைத்தனர். இதை தூங்கா நகரத்து இலைக்கட்சியினர் கொஞ்சமும் விரும்பவில்லையாம். இது சேலத்துக்காரரின் மதுரை பிரசாரத்தின்போது வெளிப்படையாகவே தெரிந்தது. அவருடன் தாமரை கட்சியினரை, இலைக்கட்சியினர் அருகே விடவே இல்லை. சமீபத்தில் தாமரைக்கட்சியினர் மூத்த நிர்வாகிகள் சிலர், சேலத்துக்காரரை சந்தித்து, கூட்டணியில் போட்டியிட விரும்பமுள்ள தொகுதிகளின் பட்டியலை கொடுத்துள்ளனர். அதில், தூங்காநகரில் வடக்கு மற்றும் தெற்குடன் முருக கடவுளின் முதல் படை வீடு அமைந்துள்ள தொகுதியையும் முன்னுரிமை விருப்ப பட்டியலில் மலராத கட்சியினர் கொடுத்துள்ளனர். இதற்கு இந்த தொகுதிகளில் தங்களுக்கு செல்வாக்கு அதிகம் என்றும், இரண்டாமிடம் கிடைக்க இதுவே காரணம் என்றும் கூறியுள்ளனராம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சேலத்துக்காரர், ‘ஒரே மாவட்டத்துல 3 தொகுதிகளா’ என்று கேட்டதோடு, ‘‘அந்தளவிற்கு நம்ம நிர்வாகிகள் உள்ளனர்’’ என தூங்காநகர மாஜி அமைச்சர்களை கடுமையாக கடிந்து கொண்டாராம்... மூன்றில் 2 எங்களுக்கு நிச்சயம். அதுவும் எந்த தொகுதி என்பதை எங்கள் கட்சி தலைமையே முடிவு செய்யும் என மலராத கட்சியினர் கூறி வருவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குக்கர் கட்சி தலைவரை கண்காணிக்க சேலத்துக்காரர் உத்தரவு போட்டிருக்காராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தில் குக்கர் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடை பெற உள்ளதாம்.. இதனால் குக்கர் கட்சி தலைமையானவரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க இலை கட்சியில் உள்ள சீனியர் நிர்வாகிகளுக்கு சேலத்துக்காரரிடம் இருந்து ரகசிய உத்தரவு வந்துள்ளதாம்... சேலத்துக்காரருக்கு எதிராக வியூகம் அமைக்க பல்வேறு கட்ட ரகசிய நகர்வுகளை குக்கர் கட்சி தலைமையானவர் செய்து வருவது, தனது ஆதரவாளர்கள் சிலரை வெளிமாவட்டங்களுக்கு அழைத்து சென்று குக்கர் கட்சி தலைமையானர் தீவிர ஆலோசனையில் இறங்கியிருப்பது இலை கட்சி சீனியர் நிர்வாகிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ரகசியமாக கண்காணிக்க சீனியர் நிர்வாகிகள் முடிவு செய்திருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா, n


