சிவகாசியில் பரபரப்பு பட்டாசு ஆலை அதிபர்கள் வீடு, ஆபீசில் ஐ.டி ரெய்டு
சிவகாசி: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு குழுக்களாக 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின்போது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியே இருந்தும் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை செய்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திடீர் சோதனை ஏன்? சிவகாசியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பட்டாசுகள் முறையான பில் இன்றி கொண்டு செல்லப்படுவதாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதாக கூறப்படுகின்றது. சிவகாசியில் இருந்து பட்டாசுகள் ஏற்றி செல்லும் சில லாரிகளில் பாதிக்கு மட்டும் முறையான பில்கள் இருப்பதாகவும் பெரும்பாலான பட்டாசுகள் பில் இன்றி கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.