சிவகாசி: சிவகாசி அருகே தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியாபுரம் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டியன் (50). இவர், சிவகாசி-எம்.புதுப்பட்டி ரோட்டில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இவரது மனைவி லலிதா சென்னையில் வசித்து வருகிறார். செல்லபாண்டியன் தனது மனைவியை சந்திக்க கடந்த 4ம் தேதி சென்னை சென்றார். இன்று காலை செங்கமலநாச்சியாபுரம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டு அறையில் கபோர்டுகள் அரிவாளால் சேதப்படுத்தப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன.
இது குறித்து செல்லபாண்டியன் அளித்த தகவலின்பேரில் திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் இயந்திரம் மூலம் ஜன்னலை அறுத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. ஆனால், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையர்கள் கையில் சிக்காமல் தப்பியது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வுசெய்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


