சிவகங்கை மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடி வருகை: மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கினார்
சிவகங்கை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சிவகங்கை மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த துணை முதல்வருக்கு, மாவட்ட எல்லையான நேமத்தம்பட்டியில், மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள அழகப்பா மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ, மாணவியர் மத்தியில் குழந்தைகள் தினவிழாவை கொண்டாடினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மெய்யநாதன், காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி, காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துதுரை, மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று மாலை 6 மணிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சாலையில் உள்ள பி.எல்.சி.டிஅரங்கத்தில் பெரியார் பெருந்தொண்டர் ராம.சுப்பையாவின் 118வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்.
கலைஞர் சிலை திறப்பு;
நாளை காலை 9 மணிக்கு சிங்கம்புணரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து பேருரை ஆற்றுகிறார். காலை 10 மணிக்கு சிங்கம்புணரியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா மன்றத்தை திறந்து வைத்தும், கலைஞர், முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோரின் திருவுருவச் சிலைகளை திறந்து வைத்து விழா பேசுகிறார். காலை 11 மணிக்கு சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டையில் திமுக முன்னாள் அமைப்பு செயலாளர், திருப்புத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.தென்னரசு முயற்சியால் பெரியாறு, வைகை நீர் கொண்டு வந்ததன் நினைவாக அவருக்கு அமைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட வெண்கலச் சிலையை திறந்து வைக்கிறார். மாலை 4 மணிக்கு சிங்கம்புணரியில் முன்னாள் அமைச்சர் மாதவனின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 5,000 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
