Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சிவகங்கை அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு: வீரருக்கு பாதுகாப்பு அளித்த செய்தியை கூறுகிறது

சிவகங்கை: சிவகங்கை அருகே, சோழபுரத்தில் சிங்க சின்னம் பொறித்த 13ம் நூற்றாண்டு அரியவகை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை அருகே, சோழபுரம் கண்மாயில், வேறுபட்ட உருவம் பொறித்த கல் ஒன்று கிடப்பதாக தகவலின்பேரில், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா, செயலாளர் நரசிம்மன் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இது குறித்து புலவர் காளிராசா கூறியதாவது: சோழபுரம் பகுதியில் கடந்த மாதம் புலிச்சின்னம் பொறித்த பழமையான ஆசிரியம் கல்வெட்டு ஒன்று கிடைத்தது. தற்போது சிங்கம் சின்னம் பொறித்த அரியவகை ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சோழபுரம் எட்டிக்கண்மாய் உள்ளே புலிச்சின்னம் பொறித்த கல்வெட்டில் ‘எட்டி எரியன்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. அந்த கண்மாய் இன்றும் அதே பெயரில் எட்டிக்கண்மாய் என அழைக்கப்படுகிறது. தற்போது கிடைத்த கல்வெட்டிலும் எட்டி எரியன் என்கிற பெயர் இடம் பெற்றுள்ளது. இதன்படி, எட்டி எரியன் என்பவன், இப்பகுதி ஆட்சியாளராக அரசப் பிரதிநிதியாக இருந்திருக்கலாம் என அறிய முடிகிறது. மேலும், எட்டி எரியன் பெயருக்கு பின்னால் ‘எட்டி யெரி பாண்டி’ என வருவதால், பாண்டிய நாட்டின் பிரதிநிதியாக கொள்ளலாம். செயங்கொண்ட பாண்டியபுரம் கல்வெட்டுகளில் முடிகொண்ட சோழபுரம், செயங்கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது கிடைத்த கல்வெட்டிலும் செயங்கொண்ட பாண்டியபுரம் என வருகிறது.

கல்வெட்டு வரிகளில், ‘ஸ்வஸ்தி ஸ்ரீ சுபமஸ்த்து என்ற வரிகள் அழிந்துள்ளன. அதில் து என்ற எழுத்து மட்டும் தெரிகிறது. மேலும், எட்டி யெ, ரி பாண்டி ச, யங்கொ, ண்டபா, ண்டியபு, ரம்சிங்க, கொடி வீ, ரர் ஆசிரி, யம் என எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 2.5 அடி உயரம், ஒரு அடி நீளம் கொண்டதாக உள்ளது. மேலும் இக்கல்வெட்டில் ஒன்பது வரிகளாக சொற்கள் மடக்கி எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டின் இறுதியில் நடுவில் வில் அம்பும் இரண்டு பகுதிகளில் மங்களச் சின்னமாக குத்துவிளக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டி எரியன் என்னும் தலைவன், அரசப் பிரதிநிதி, சிங்கக்கொடி வீரருக்கு ஆசிரியம் அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆசிரியம் என்பது பாதுகாப்பைக் குறிக்கும். அடைக்கலம் அளித்தல், மருத்துவ உதவி செய்தல், உணவு அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

பொதுவாக பண்டைக் காலங்களில் வணிகர்கள் தரை வழியாக வண்டிகளிலோ, நடையாகவோ பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் தங்கி, பொருளை பாதுகாத்து அடுத்த பயணத்திற்கு தயாராகி உள்ளனர். அவ்வாறான பாதைகளை, அவர்கள் தங்கும் இடங்களை குதிரை மற்றும் யானை உள்ளிட்ட நிலைப்படைகளைக் கொண்டு வணிக குழுக்களை பாதுகாத்துள்ளனர். அவ்வாறான வீரர்களுக்கு ஆசிரியம் வழங்கப்பட்டிருக்கலாம். கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இதன் காலம் 13ம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். சிவகங்கை தொல்நடைக்குழு அடையாளப்படுத்தும் ஆசிரியம் வகையைச் சார்ந்த 4வது கல்வெட்டாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.