‘‘போலீஸ் பேரை சொல்லி, வசூல் வேட்டையில் தனிநபர் ஈடுபடும் சம்பவங்களால் காக்கிகளே புலம்பும் சத்தம் வெளியே கேட்குதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல பேரத்துல தொடங்கி பட்டுல முடியுற காக்கிகள் நிலையம் இருக்குது.. இந்த காக்கிகள் நிலையத்துல காக்கிகள் ஸ்ட்ரென்த் கொஞ்சம் குறைவாக இருக்குது..
அதுல ஒரு தனி நபரு, பல வருஷமாக காக்கிகள் நிலையத்துல, எடுபுடி வேலைகளை செஞ்சிக்கிட்டு, பணியில இருக்குற 3 ஸ்டார், 2 ஸ்டார் காக்கிகளுக்கு காலை, மதியம், இரவுன்னு ஓட்டல்ல இருந்து உணவுகளை வாங்கி கொடுத்து பணிவிடைகளை கச்சிதமாக செய்து வர்றாராம்.. இதனால வர்ற ஸ்டார் காக்கிகள் மனசுல ஈசியா இடம் பிடிச்சுடுவாராம்.. இப்படி காக்கிகள் மனசுல இடம் பிடிச்சவரு, காக்கிகள் பேரை சொல்லியே, கரன்சிய பிடிக்க ஆரம்பிச்சுட்டாராம்..
அதாவது ஸ்டார் காக்கிகளுக்கு ப வைட்டமின் கொடுக்கணும்னு மிரட்டி வசூல் செய்ய ஆரம்பிச்சாராம்.. அந்த விஷயம் தெரிந்ததும் அப்போ, இருந்த காக்கிகள் அந்த நபரை காக்கிகள் நிலையத்துக்கே வரக்கூடாதுன்னு சொல்லி துரத்திவிட்டுட்டாங்களாம்.. காலமும், கடந்தது, காக்கிகளும் பணியிடமாற்ற ஆயிட்டாங்க.. இப்ப திரும்பவும் விட்ட வேலைய கச்சிதமாக செய்து, தீவிர வசூல்வேட்டையில இறங்கிட்டாராம்..
இப்படி ஒருபடி மேல போயி, போலீஸ்காரரை போலவே, காக்கி பேண்ட் டீ ஷர்ட், போலீஸ் ஷூ என்று போட்டுக்கொண்டு மிரட்டல் வசூல் நடத்துறாராம்.. காக்கிகள் நிலைய தகவல்களையும் கசியவிட்டு காசு பார்க்குறாராம்.. இதனால காக்கிகள் தங்களுக்கு அவப்பெயர்தான் மிச்சம்னு புலம்ப ஆரம்பிச்சுட்டாங்களாம்.. இந்த புலம்பல் சத்தம் வெளிய கேட்க ஆரம்பிச்சிருக்குது..
மாவட்ட காக்கி உடனே கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்னு காக்கிகளே எதிர்பார்ப்புல இருக்குறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தலுக்கு சீட் கேட்டு ஆதரவாளர்கள் யாரும் சீண்டாததால தனது நிலையை எண்ணி ரொம்பவே வருத்தப்படுகிறாராமே தெர்மா கோல்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கு.. இலைக்கட்சி இங்கு 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மாஜி தெர்மோகோல் காரரின் கட்டுப்பாட்டில் 4 தொகுதிகள் வருதாம்...
இதில் ஒரு தொகுதியில் தான் போட்டியிட்டாலும் மற்ற 3 தொகுதிகளில் கூட்டணிக்கு போக 2 தொகுதிகளிலாவது தனது ஆதரவாளர்களை நிறுத்தி தனது செல்வாக்கை ஏரியாவுக்குள் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்ற நினைப்பில் அவர் இருந்தாலும், அவரிடம் இதுவரை யாரும் சீட் கேட்டு வரவில்லையாம்.. தேர்தலில் ேபாட்டியிடவே யாருக்கும் விருப்பம் இல்லையா?
இல்லை தன் மூலம் முயற்சித்தால் மேலிடத்தில் இருந்து சீட் பெறமுடியாது என நினைத்து விட்டார்களா? ஒரு மரியாதைக்குக் கூட இதுவரை யாரும் நம்மிடம் சீட்டு கேட்டு வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.. மாவட்டத்தில் இந்த அளவுக்கு தன் நிலை கீழிறங்கி விட்டதே என தெர்மோகோல் காரர் ரொம்பவே வருத்தத்தில் உள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தலைவர் பட்டியல் வெளியாகும் என்ற நம்பிக்கையில் இருந்த கதர் கட்சி நிர்வாகிகள் சோர்ந்துபோய் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கதர் கட்சியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படாத 2 மாவட்டங்களில் ஒன்று கடைகோடி மாவட்டம். இங்கு நிர்வாகிகள் நியமனத்திற்காக நியமிக்கப்பட்ட மேலிட பார்வையாளர் மீது எழுந்த பண பேர சர்ச்சைகளும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற செயல்பாடுகளும் புதிய தலைவர்கள் நியமனத்தை கேள்விக்குறியாக்கியது..
வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்தது போன்று நிர்வாகிகள் பட்டியல் தயாராகி வரும்போது பூதாகரமாக எழுந்த பிரச்னை காரணமாக கடைகோடி மாவட்ட தலைவர்கள் பட்டியல் கடைசியில் வெளியாகவில்லையாம்.. இதனால் தலைவர் பதவி எதிர்பார்ப்பில் இருந்த பலரும் ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளனராம்.. அதன் பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவரை புதிய பார்வையாளராக நியமித்து தலைவர்களை தேர்வு செய்ய கதர் கட்சி மேலிடம் உத்தரவிட்டதாம்..
அவரும் ஓரிரு நாட்கள் மாவட்டத்தில் முகாமிட்டு புதிய தலைவர்கள் தேர்வு பட்டியலை அனுப்பி வைத்துள்ளாராம்.. உடனே இந்த பட்டியல் வெளியாகும் என்று தலைவர் பதவி போட்டியில் இருந்தவர்கள் நம்பினாங்களாம்.. ஆனால் கட்சி மேலிடம் 2 வது பட்டியலை அறிவிக்க தாமதம் ஆகி வரும் நிலையில் தலைவர் பதவி எதிர்பார்ப்பில் உள்ளவர்கள் சோர்ந்து போயுள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிட்டிங் தொகுதி பறிபோவதால் இலைக்கட்சி எம்எல்ஏ புலம்புகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, மான்செஸ்டர் மாவட்டத்தில் இலைக்கட்சிக்கும், தமிழ்நாட்டில் மலராத கட்சிக்கும் இடையே பெரும் மறைமுக யுத்தம் நடக்கிறது. ‘மான்செஸ்டர் எங்களது கோட்டை’ என இலைக்கட்சி பெல் மார்தட்டி வரும் வேளையில், ‘இல்லை... இல்லை... இங்க நாங்கள் தான் கிங்...’ என மலராத கட்சியினர் மல்லுகட்டுகின்றனராம்..
கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இலைக்கட்சி, மலராத கட்சியும் இணைந்துதான் களத்தில் இறங்கின. அப்போது, மலராத கட்சிக்கு மான்செஸ்டர் தலைநகரில் தெற்கு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. தற்போது, ஆனா தற்போது மலராத கட்சி 4 தொகுதி வேணும் என அடம்பிடிக்கிறார்களாம்.. ஆனால், பெல்ஆனவர் மறுத்துவிட்டாராம்.. ‘கூடுதலாக ஒன்றே ஒன்று தருவோம்.. மொத்தம் இரண்டுதான்... அதற்கு மேலே பருப்பு வேகாது...’ என தடாலடியாக அறிவித்து விட்டாராம்.
அதனால், மூன்றெழுத்து பெயர் கொண்ட சிட்டிங் பெண் எம்எல்ஏ தெற்கில் இருந்து வடக்கு தொகுதிக்கு இடம்மாற முடிவுசெய்துவிட்டாராம்.. இது, கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம்... அதனால், வடக்கு தொகுதியில் சிட்டிங் இலைக்கட்சி எம்எல்ஏ அய்யோ... சீட் போச்சே...’’ என புலம்பி தள்ளுகிறாராம்.. அதோடு தொகுதி கிடைக்காம போனதற்கு காரணமானவங்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுகிறேனு ஆதரவாளர்களிடம் சவால் விடுத்து வருகிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

