Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுமுகை அருகே ஒற்றை காட்டு யானை உலா : பொதுமக்கள் பீதி

Sirumugai, wild elephantமேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை லிங்காபுரம் பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி காட்டு யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களில் பயிர்களை சேதம் செய்வதோடு,மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக கடந்த சில தினங்களாகவே இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் லிங்காபுரம் வனச்சோதனை சாவடியில் இருந்து காந்தையூர் செல்லும் சாலையில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை உலா வந்தது.இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.விரைந்து சென்ற வனத்துறையினர் நீண்ட நேரமாக அப்பகுதியிலேயே முகாமிட்டு காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அதனை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.அதன் பின்னரே அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில்: லிங்காபுரம் வனச்சோதனை சாவடியில் இருந்து காந்தையூர் செல்லும் சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி.மேலும், பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் இவ்வழியே நடந்து சென்று வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று மாலை ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் குறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.விரைந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இப்பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.வனத்துறையினர் இதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.